விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7500 ரன்கள்: கோலி புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7500 ரன்கள்: கோலி புதிய சாதனை

jagadeesh

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 7500 ரன்களை கடந்து சாதனைப் படைத்தார் விராட் கோலி.

இந்தப் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 7,500 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார். கோலியும், கவாஸ்கரும் இதனை 154-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 144-வது இன்னிங்ஸில் இதனை அடைந்துள்ளார். சர்வதேச அளவில் 7,500 ரன்கள் என்ற மைல்கல்லை துரிதமாக எட்டிய வீரர்கள் வரிசையில் கோலி 9-வது இடத்தில் உள்ளார். வேகமாக எட்டிய இந்திய வீரர்களில் கோலி 4-வது இடம் பெற்றுள்ளார்.

முன்னதாக நியுசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. சவுதாம்டனில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. 2 ஆவது நாளில், டாஸ் வென்ற நியுசிலாந்து அணி இந்திய அணியை பேட் செய்யக் கேட்டுக் கொண்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, சுப்மான் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தனர்.

ரோகித் ஷர்மா 34 ரன்களிலும், சுப்மான் கில் 28 ரன்களிலும் அடுத்தடுத்த விக்கெட்டை இழந்தனர். புஜாரா 8 ரன்களில் பெவிலியன் திரும்பினர். நாளின் இறுதியில் கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்ய ரஹானே 29 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.