விளையாட்டு

கோலி, ரஹானே பொறுப்பான ஆட்டம்: இந்தியா 307 ரன்கள் சேர்ப்பு

கோலி, ரஹானே பொறுப்பான ஆட்டம்: இந்தியா 307 ரன்கள் சேர்ப்பு

webteam

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராத், ரஹானேவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி தோல்வியை தழுவி, தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. 

(ரஹானே)

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய்-க்கு பதிலாக ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பன்ட், குல்தீப் யாதவுக்கு பதிலாக பும்ரா சேர்க்கப்பட்டிருந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும், ராகுலும் களம் இறங்கி சிறப்பாக அடிக்கொண்டிருந்தனர். ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்திருந்த போது வோக்ஸ் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்ற பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ராகுலும் வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 23 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த புஜாராவையும் தூக்கினார் வோக்ஸ். 82 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியை கேப்டன் விராத் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் மீட்டனர்.  

நிதானமாக விளையாடிய இவர்கள் அரை சதம் அடித்தனர். விராத் கோலி தனது 18-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து ரஹானே 13-வது அரை சதத்தை பதிவு செய்தார். பின்னர் ரஹானே 81 ரன்களில் பிராட் பந்துவீச்சில் குக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலி 97 ரன்களில் அடில் ரஷித் பந்தில் கேட்ச் ஆனார்.

அவரைத் தொடர்ந்து பாண்ட்யாவும் அறிமுக வீரராக களமிறங்கிய ரிஷப் பன்டும் ஆடினர். ரிஷப், வந்ததுமே ரஷித் பந்தில் அதிரடியாக ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார். எந்த வித பதட்டமும் இல்லாமல் அவர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் பாண்ட்யா 18 ரன்களில் வெளியேற நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 307 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரிஷாப் பன்ட் 22(32) ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், பிராட் மற்றும் ரஷித் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.