விளையாட்டு

மைதானத்தில் கே.எல்.ராகுல் செய்த செயல்... பாராட்டும் நெட்டிசன்ஸ்

மைதானத்தில் கே.எல்.ராகுல் செய்த செயல்... பாராட்டும் நெட்டிசன்ஸ்

PT

இந்தியா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பு மரியாதை செய்யும் விதமாக கே.எல்.ராகுல் சுவிங்கம்மை அகற்றுவது பாராட்டப்பட்டு வருகிறது.

இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்று ஜிம்பாப்வேயில் தொடங்கியது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக வழி நடத்தினார்.

சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கே.எல்.ராகுல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தொடரில் பங்கேற்றார். நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் கே.எல்.ராகுல். இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டனாக விளையாடிய நிலையில், அந்த மூன்று போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது.

நடந்து முடிந்த ஒரு நாள் போட்டியில் கே.எல்.ராகுல் நான்காம் நிலை வீரராக களமிறங்க இருந்தார். சமீபகாலமாக அவர் விளையாடாத போதிலும் எதற்காக அணியில் இடம் அளித்தீர்கள் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், இந்தியா ஒரு விக்கெட்டுகள்கூட இழக்காமல் வெற்றி பெற்றது. இதனால் அவர் திறமையை அவரால் நிரூபிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் அவரது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெற முடியாத நிலையிலும், விளையாட்டு மைதானத்தில் தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து செய்த செயலால் பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்தியா ஜிம்பாப்வே இடையேயான முதல் ஒரு நாள் போட்டியின்போது, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பாக அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் தான் மென்று கொண்டிருந்த சுவிங்கம்மை அகற்றி இருக்கிறார் கேஎல் ராகுல். அந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெட்டிசன்கள் கே.எல்.ராகுலை பாராட்டி வருகின்றனர்.