விளையாட்டு

IND vs SL: டெஸ்ட் போட்டி போல ஆடிய வீரர்கள்... ஒருவழியாக தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

IND vs SL: டெஸ்ட் போட்டி போல ஆடிய வீரர்கள்... ஒருவழியாக தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

webteam

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 12) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக நுவனிது பெர்ணாண்டோ 50 ரன்களும், குஷல் மெண்டிஸ் 34 ரன்களும், துனித் 32 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகம்மது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை விளையாண்ட போட்டியே டெஸ்ட் போட்டி போன்று இருந்த நிலையில், இந்திய அணி விளையாண்ட ஆட்டமும் அதைப்போல்தான் இருந்தது. மிக இலகுவான இலக்கைக் கொண்ட இந்த ரன்களை அடிக்க இந்திய அணி 43 ஓவர்களை எதிர்கொண்டது. இலங்கையாவது 40 ஓவர்களைத்தான் எதிர்கொண்டது. ஆனால், இந்திய அணி கூடுதலாக 3 ஓவர்களை எடுத்துக்கொண்டதுடன், 6 விக்கெட்களையும் இழந்தது. கடந்த போட்டியில் ஜொலித்த கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் இன்றைய போட்டியில் நிலைத்து நின்று ஆடாமல் நடையைக் கட்டினர்.

அதன் விளைவு, இந்த குறைந்த ரன்னுக்கே பந்துவீச்சாளர்களும் பேட் பிடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதுவும் போராடி வெற்றிபெறும் நிலைமை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 103 பந்துகளைச் சந்தித்து 64 ரன்களை எடுத்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 53 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். இறுதியில் இந்திய அணி, 43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரே மற்றும் கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 20-30 ஓவர்களில் ஜெயிக்க வேண்டிய இந்தப் போட்டியானது, இந்திய வீரர்களின் ஆமை வேக ஆட்டத்தால் 43 ஓவர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கான கடைசி ஒருநாள் போட்டி, வரும் 15ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்