இங்கிலாந்தில் தி ஹண்ட்ரடு (100 பந்துகள்) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒரு அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மொத்தம் 100 பந்துகள் கொடுக்கப்படும். பந்துவீச்சாளர் ஒரு ஓவருக்கு 5 பந்துகள் மட்டுமே வீசுவார். அந்த வகையில், இதன் 24வது லீக் போட்டியில், சதர்ன் பிரேவ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி மொத்தம் 100 பந்துகளில், 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
பின்னர் பிரேவ் சதர்ன் அணிக்காக விளையாடிய தொடக்க வீரர்களான அலெக்ஸ் டேவிட் 19 பந்தில் 28 ரன்களும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 26 பந்தில் 28 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் சொதப்பினர். என்றாலும், பேட்டிங்கில் ஆறாவது இடத்தில் களமிறங்கிய கீரன் பொல்லார்டு, டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியின் ரஷித் கான் ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் அடித்து அமர்க்களப்படுத்தியதுடன், அணியையும் வெற்றிபெற வைத்தார்.
பிரேவ் சதர்ன் அணிக்கு கடைசி 20 பந்தில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரசித் கான் வீசிய 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து 30 ரன்கள் எடுத்து அணியின் சுமையைக் குறைத்தார். இறுதியாக பிரேவ் சதர்ன் அணி 99 பந்துகளில் 8 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிரன் பொல்லார்டு ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதற்கு முன்பு இதே கிரன் பொல்லார்டு கடந்த 2021ஆம் ஆண்டு டி20 தொடரில் இலங்கைக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிகஸர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய வீரர் யுவராஜுக்குப் பிறகு டி20யில் 6 பந்தில் 6 சிக்சர் விளாசி சாதனைப் பட்டியலில் இரண்டாவது வீரரானார். யுவராஜ் சிங் 2007 டி20யில் இங்கிலாந்துக்கு எதிராக 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.