விளையாட்டு

ஒரு வருடத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய பொல்லார்ட்!

ஒரு வருடத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய பொல்லார்ட்!

webteam

ஒரு வருடத்துக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ளார் ஆல்ரவுண்டர் பொல்லார்ட்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இளம் வீரர்களை கொண்ட, போதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்றது. அதனால் பெரிய போராட்டம் எதுவும் இல்லாமல் அந்த அணி, எளிதில் வீழ்ந்தது. இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி நடக்கிறது.

இதற்கிடையே ஒரு நாள் போட்டி மற்றும் டி20 தொடருக்கு இந்தியாவில் விளையாடி அனுபவம் உள்ள அந்த நாட்டின் நட்சத்திர வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் அங்கு நடந்த கரீபியன் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணியின் கேப்டன் டிவைன் பிராவோ, அதிரடி வீரர் பொல்லார்ட், சுழலில் மிரட்டும் சுனில் நரேன் ஆகியோர் அணியில் இடம் பிடித்து இந்திய அணிக்கு கடும் சவால் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் டிவைன் பிராவோ, சுனில் நரேன் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒரு வருடத்துக்கு பொல்லார்ட்டும் இரண்டு வருடத்துக்குப் பிறகு டேரன் பிராவோவும் டி20 தொடருக்கு திரும்பியுள்ளனர். ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ ரஸலும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் இவர்கள் ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்களான, சந்தர்பால் ஹேம்ராஜ், பேபியன் ஆலன், ஓஷண்டே தாமஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, சந்தர்பால் ஹேம்ராஜ், சிம்ரன் ஹெட்மையர், சாய் ஹோப், அல்ஸாரி ஜோசப், எவின் லெவிஸ், அஸ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மான் பாவெல், கெமர் ரோச், சாமுவேல்ஸ், தாமஸ்.

டி20 அணி விவரம்:
கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஹெட்மையர், லெவிஸ், மெக்காய், நர்ஸ், கீமோ பால், காரி பியர்ஸ், பொல்லார்ட், போவல், தினேஷ் ராம்தின், ஆண்ட்ரு ரஸல், ருதர்போர்ட், தாமஸ்.