விளையாட்டு

குழந்தைகளே கிரிக்கெட்டை உங்கள் விளையாட்டாக தேர்வு செய்யாதீர்கள்: ஜிம்மி நீஷம்

குழந்தைகளே கிரிக்கெட்டை உங்கள் விளையாட்டாக தேர்வு செய்யாதீர்கள்: ஜிம்மி நீஷம்

webteam

நியூசிலாந்தில் இனி குழந்தைகள் யாரும் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்யவேண்டாம் என்று அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் அறிவுறுத்தியுள்ளார். 

உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. எனவே வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகள் தலா 15 ரன்களை எடுத்தன. எனினும் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியைவிட அதிக பவுண்டரிகள் அடித்ததால் வெற்றிப் பெற்றது. 

இந்நிலையில் இந்தத் தோல்விக்கு பிறகு நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “குழந்தைகளே இனி நீங்கள் யாரும் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள். வெறு எதாவது ஒரு விளையாட்டை நீங்கள் தேர்வு செய்யுங்கள்” என அறிவுரை வழங்கியுள்ளார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 17 பவுண்டரிகள் அடித்திருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகள் அடித்திருந்தது. எனவே பவுண்டரிகள் அதிகம் அடித்த அணி என்ற வகையில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இந்த அதிக பவுண்டரிகள் அடித்த அணியை வெற்றியாளராக அறிவித்த விதியை ஜிம்மி நிஷம் சாடியுள்ளார். 

முன்னதாக நியூசிலாந்து அணி சார்பில் சூப்பர் ஓவரில் களமிறங்கிய ஜிம்மி நீஷம் சிறப்பாக விளையாடினார். இந்த ஓவரில் ஒரு சிக்சர் விளாசி நியூசிலாந்து அணி15 ரன்களை எடுக்க முக்கிய காரணமாக இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.