விளையாட்டு

“சாமுவேல்ஸை வெறுப்பேத்துவதா..!” - கலீலுக்கு ஐசிசி எச்சரிக்கை

“சாமுவேல்ஸை வெறுப்பேத்துவதா..!” - கலீலுக்கு ஐசிசி எச்சரிக்கை

webteam

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸை வெறுப்பேத்தும்படி நடந்துகொண்டதாக இந்திய பந்துவீச்சாளர் கலீலுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மா, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 137 பந்துகளில் 162 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 81 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

இலக்கை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமத் ஆக்ரோசமாக பந்துவீசினார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மர்லோன் சாமுவேல்ஸ், சிம்ரோன் ஹெட்மயர் மற்றும் ரோவ்மன் பவுல் ஆகியோர் அடுத்தடுத்த தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 153 ரன்களி ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் ஓவர் 13.4 ஆம் பந்தில் சாமுவேல்ஸ் அவுட் ஆகிய போது, அவரிடம் ஆக்ரோசமாக கத்தினார். இந்தச் செயல் சாமுவேல்ஸை வெறுப்பேத்தும் வகையில் அமைந்துள்ளதாக, கலீலுக்கு ஐஐசி எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அவர் அபராதம் செலுத்தும் வகையில் லெவல் 1 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை களத்தில் இருந்த இரண்டு நடுவர்கள் மற்றும் மூன்றாவது நடுவரிடம் கலந்தாலோசித்து ஐசிசி உறுதி செய்துள்ளது.