தென்னாப்பிரிக்க அணி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் கால்பதிக்க இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக பேசிய பீட்டர்சன், தென்னாப்பிரிக்காவில் அடுத்த இரண்டு ஆண்டுகள் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறத் திட்டமிட்டுள்ளேன். பேட்டிங் செய்வதில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. களத்தில் என்னால் நீண்டநேரம் நிலைத்து நின்று விளையாட முடியும் என்று நம்புகிறேன். கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை வயது ஒரு தடையில்லை என்று தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பீட்டர்சன், 35 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அசத்தினார். சர்ரே அணிக்காக பீட்டர்சன் களமிறங்கினார். அந்த போட்டியில் சர்ரே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2013-14ம் ஆண்டில் நடைபெற்ற ஆசஷ் தொடர் தோல்விக்குப் பின்னர் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்ட பீட்டர்சன், அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஐசிசி விதிமுறைப்படி 2019ம் ஆண்டுவரை இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அவர் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடத் தகுதி பெறுவார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார்.