நானும் என் மனைவியும் இப்படி ஒரே இடத்திலிருந்ததே இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் இன்ஸ்டா பக்கத்தில் நேரலையில் பேட்டி எடுத்து வருகிறார். பீட்டர்சன் இதற்கு முன்பு ரோஹித் சர்மா மற்றும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோரை பேட்டி கண்டுள்ளார். இன்ஸ்டாவில் இவர்கள் இருவருக்குமிடையே நடைபெறும் உரையாடல் மாலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்தப் பேச்சு இவர்களின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த உரையாடலின் போது விராட் கோலியும் கெவின் பீட்டர்சனும் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு பற்றி விவாதித்தனர். அப்போது கோலி, ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதற்கு முன்பு நாங்கள் ஒரு பண்ணைக்குச் சென்றோம். அங்கே சில இடங்கள் இருக்கின்றன. இதைப் பார்க்கும் போது மனமே உடைந்து போகும்படி உள்ளது. மக்களுக்கு இது ஒரு கடினமான தருணம் என கோலி கூறினார். மேலும் அவர், குருக்ராமில் உள்ள எங்கள் வீட்டிலிருந்து என் சகோதரர் என்னை அழைத்தார். அவர் முதன்முறையாக உடற்பயிற்சி கூடத்தைப் பயன்படுத்துகிறார். நான் எங்கள் வாழ்க்கையை வரவேற்கிறேன் என்று அவனிடம் சொன்னேன் என்றும் பேசினார்.
மேலும் மனைவி அனுஷ்காவுடன் நேரத்தைச் செலவழிப்பது குறித்து கோலி உரையாடும் போது, “நாங்கள் இவ்வளவு காலமாக ஒரே இடத்திலிருந்ததே இல்லை. இது வினோதமாக உள்ளது. தனிமைப்படுத்திக் கொள்வதற்காக இப்படி தனித்தனியே செல்ல வேண்டி உள்ளது நல்ல விஷயமல்ல; ஒன்றாக இருப்பதற்காக இந்த நேரத்தைப் பயன்படுத்துகிறோம். மேலும் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். நேர்மறையான மனத்துடன் இருக்கிறோம். இது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நான் உங்களுடன் சின்னசாமி மைதானத்தில் ஹேங்கிங் அவுட்டில் இருப்பேன் ” எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் சூழ்நிலைமை குறித்து பீட்டர்சன் பேசும் போது, குறைந்த பட்சமாக டெல்லியில் மக்களுக்கான வெப்பநிலையாவது நன்றாக உள்ளது. ஆனால் இங்கே இங்கிலாந்தில் அது மிகக் குறைவாக உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலைமை குறித்து கோலி, எங்களது பொறுப்புணர்வு நன்றாக இருக்கிறது. ஒரு சில நபர்கள் வழிகாட்டுதல்களை மதிக்காமல் நடந்து கொண்ட வீடியோவை நீங்கள் பார்த்திருக்க முடியும். அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. மக்கள் இவற்றைப் புரிந்துகொண்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார்கள் என்றே நம்புகிறேன். இந்தச் சிக்கலைக் கையாள்வதில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.