விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து வீரர் சாதனை சதம்!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து வீரர் சாதனை சதம்!

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ’பிரையன் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். 

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த ஆண்டு டெஸ்ட் அந்தஸ்த்தை வழங்கியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அயர்லாந்து அணி, பாகிஸ்தானுடன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியை கடந்த 11-ம் தேதி தொடங்கியது. டப்ளின் நடக்கும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 310 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது.

அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 130 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் அந்த அணி பொறுப்புடன் ஆடிவருகிறது. இந்நிலையில் அந்த அணியின் கெவின் ஓ’பிரையன் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 186 பந்துகளை எதிர்கொண்ட அவர், சதம் அடித்து அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் சாதனை நிகழ்த்தியுள்ளார். 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களை குவித்து, 139 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 5-வது நாள் ஆட்டம் நடக்கிறது. கெவின் ஓ’பிரையன் 118 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். 

முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தது பற்றி கெவின் ஓ’பிரையன் கூறும்போது, ‘அயர்லாந்தின் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்ததில் மகிழ்ச்சி. இருந்தாலும் 2011 -ல் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சதம் முக்கியமானது. பெங்களூரில் நடந்த அந்தப் போட்டியில் 50 பந்துகளில் சதமடித்திருந்தேன்’ என்றார்.