விளையாட்டு

37 பந்துகளில் சதமடித்து அசத்தல்: கேரள வீரர் அசாருதீனை பாராட்டும் கிரிக்கெட் உலகம்!

webteam

கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் இளம் கிரிக்கெட் வீரர் அசாருதீன். 1994-ம் ஆண்டு இவர் பிறந்தபோது, இவருக்கு வேறொரு பெயரை வைக்கவேண்டும் என்று அவரது பெற்றோர்கள் நினைத்திருந்தனர். அப்போது அவரது சகோதரர் கமருதீன், இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் பெயரை வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததால் அசாருதீன் என பெயர் சூட்டப்பட்டது.

இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இளம் வீரர் அசாருதீன் ஆடுகளத்தில் தனது அடையாளத்தை பதிவிட்டிருக்கிறார். இவர் சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார். காரணம், நேற்று நடந்த `சையத் முஷ்டாக் அலி கோப்பை (Syed Mushtaq Ali trophy)’ போட்டியில் கேரள அணி சார்பாக மும்பைக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் தனது அணியை மகத்தான வெற்றியை நோக்கி கொண்டுசென்றார் அசாருதீன். அசாருதீனின் இந்த சாதனையை கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் 'அசாதாரண ஆட்டம்' என்று பாராட்டியுள்ளனர்.

"நான் பல ஆண்டுகளுக்கு முன்பு முகமது அசாருதீன் என்ற அசாதாரண வீரரைப் பார்த்தேன். இப்போது நான் அதே பெயரில் இன்னொருவரைப் பார்க்கிறேன்" என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ட்வீட் செய்துள்ளார்.

மும்பைக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசாருதீனின் இன்னிங்க்ஸை ரசித்தேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், அசாருதீன் மற்றும் சச்சின் பேபி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சார்பாக ஆடிய கிறிஸ் கெயில் டி20-யில் அதிவேக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 30 பந்துகளில் சதமடித்த அவர், 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல 2018-ம் ஆண்டு 32 பந்துகளில் சதமடித்து அசத்தினார் ரிஷப் பண்ட். ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை வரிசையில் இணைந்திருக்கிறார் அசாருதீன்.

வலது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான அசாருதீன் 2015 ஆம் ஆண்டில் கேரளாவின் முதல்தர கிரிக்கெட்டில் சேர்ந்தார். அன்டர் 19 மற்றும் அன்டர் 23 பிரிவுகளில் சிறப்பாக ஆடி முன்னேறி டி20-ல் சேர்ந்தார். இடையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்தபோதும், விடாமுயற்சியுடன் அணியில் ஒரு நிலையான வீரராக நிலைத்து நிற்கிறார்.

வாழ்த்துகள் அசாருதீன்!