விளையாட்டு

பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் பேட்மின்டன் வீரர்

பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் பேட்மின்டன் வீரர்

webteam

இந்திய பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் ஆம்ஸ்டர்டாம் நகரில் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு தவித்துவருவது தெரிய வந்துள்ளது.

இந்திய பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப். 2014 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். சக பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை இவர் காதல் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்கள் திருமணம் டிசம்பரில் நடக்க இருக் கிறது. இந்நிலையில், டென்மார்க் ஓபன் போட்டியில் பங்கேற்க சென்ற அவர் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துள்ளார். இதுபற்றி அவர் ட்விட்டரில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கேட்டுள்ளார். 

அதில், ’ஆம்ஸ்டர்டாம் நகரில் என் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டேன். அடுத்து டென்மார்க் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஜெர்மனியின் சார்லக்ஸ் ஓபன் ஆகிய போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அக்டோபர் 14 அன்று டென்மார்க் செல்ல டிக்கெட் எடுத்துள்ளேன். இந்த விஷயத்தில் உங்கள் உதவி தேவை’ என குறிப்பிட்டிருந்தார். இதை விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோருக்கும் டேக் செய்துள்ளார்.


இதையடுத்து உடனடியாக அவருக்கு பதிலளித்த அமைச்சர் ரத்தோர், ‘இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசிவிட்டேன். நெதர்லாந்துக்கான இந்திய தூதரகம் விரைவில் இதைப் பார்த்துக்கொள்ளும்’ என்று தெரிவித்துள்ளார். 

இவரது ட்வீட்டை கண்ட நெதர்லாந்துக்கான இந்திய தூதர் வேணு ராஜாமணி, தூதரகத்திற்கு உடனடியாக வந்து தொடர்பு கொள்ளுமாறு அவருக்கு பதிலளித்துள்ளார்.