இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலமும் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
இந்நிலையில் இந்தப் பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கபில்தேவ், அன்ஷுமன் கெயிவாட் (Anshuman Gaekwad), சாந்தா ரங்கசாமி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை வரும் ஆகஸ்ட் மாதம் 13 அல்லது 14ஆம் தேதி நேர்காணல் நடத்தவுள்ளனர்.
வழக்கமாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரைக் கொண்ட ஆலோசனை கமிட்டி தான் பயிற்சியாளரை தேர்வு செய்து வாரியத்துக்கு பரிந்துரைக்கும். சச்சின், லட்சுமண் உள்ளிட்டோர் மீது இரட்டை ஆதாய பதவி சிக்கல் இருப்பதால், அவர்களுக்கு பதில், மகளிர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை தேர்வு செய்த கபில்தேவ் தலைமையிலான குழுவே இந்தப் பயிற்சியாளரையும் தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.