Sachin Tanwar Patna Pirates
கபடி

Patna Pirates | இழந்த பெருமையை மீட்டெடுப்பார்களா இந்த பாட்னா பைரேட்ஸ்..?

ஒருகாலத்தில் பாட்னா பைரேட்ஸோடுவோடு மோதவே அணிகள் யோசித்தது உண்டு. இன்றோ எளிதாய் புலப்படும் பலவீனங்களோடு களம்காணக் காத்திருக்கிறது.

Nithish

ஐ.பி.எல்லில் எப்படி சென்னையோ அதே போல பி.கே.எல்லில் பாட்னா. ஒன்பது சீசன்களில் மூன்று முறை சாம்பியன். அதுவும் தொடர்ந்து மூன்று தடவை. முதல் ஐந்து சீசன்களில் தொடர்ந்து ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவந்த அணி. அதற்கடுத்த இரண்டு சீசன்கள் நிறையவே தடுமாறி மீண்டும் எட்டாவது சீசனில் ரன்னர் அப். போன சீசனில் மீண்டுமொரு பாதாள வீழ்ச்சி. பி.கே.எல்லில் அதிக போட்டிகள் ஆடிய அணி. அதிக வெற்றி சதவீதம் வைத்திருக்கும் அணி. கிட்டத்தட்ட சி.எஸ்.கேவின் பயணம் போலவே இருக்கிறதா? அதுதான் பாட்னா பைரேட்ஸ்.

லீட் ரெய்டரான சச்சினையும் சீனியர் டிபென்டரான நீரஜையும் மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற முக்கிய பிளேயர்களை எல்லாம் ஏலத்திற்கு முன் விடுவித்துவிட்டது பாட்னா பைரேட்ஸ் அணி. போன சீசனில் அணி அதுவரை இல்லாத அளவு மிக மோசமாய் விளையாடியதால் எடுத்த முடிவு அது. அது ரெய்ட் டிபார்ட்மென்ட்டில் ஓரளவுக்கு கைகொடுக்கவும் செய்தது. முன்னாள் தமிழ் தலைவாஸ் வீரரான மஞ்சித்தை 92 லட்சம் கொடுத்து வாங்கினார்கள். கூடவே ராகேஷ் நர்வாலும் அடிப்படை விலைக்கே கிடைத்தார். கடந்த இரண்டு சீசன்களாக தங்களோடு பயணிக்கும் சஜின் சந்திரசேகரையும் மீண்டும் ஏலத்தில் எடுத்து உள்ளே கொண்டுவந்தார்கள். இவையெல்லாம் தாண்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது நிர்வாகம் இளம் ஆல்ரவுண்டர்கள் மேல் செலுத்திய ஆர்வம். கேட்டகிரி டி என்பது கேரியரை இப்போதுதான் தொடங்கும் இளம் வீரர்களுக்கான பிரிவு. அதிலிருந்த அங்கித்தை அவரின் அடிப்படை விலையிலிருந்து மூன்று மடங்கு அதிகமாய் கொடுத்து வாங்கினார்கள். இன்னொரு ஆல்ரவுண்டர் ரோஹித்தையும் போராடித் தூக்கினார்கள். இந்த சீசனில் பாட்னாவின் பழைய ஃபார்மை மீட்டெடுக்கும் பெரும்பங்கு இந்த இளம் வீரர்களுக்கு இருக்கிறது.

பலம்

அனுபவம் வாய்ந்த ரெய்டிங் குழு. மஞ்சித் ஏகப்பட்ட அணிகளின் லீட் ரைடராக கடந்த சில சீசன்களில் வலம்வந்தவர். சச்சின் கடந்த இரு சீசன்களாக பாட்னாவிற்காக பாயின்ட்களை குவித்து வருபவர். மூன்றாவது ரைடராக இவர்கள் பயன்படுத்தப்போகும் ராகேஷ் நர்வால் கிட்டத்தட்ட பி.கே.எல்லின் தொடக்ககாலம் தொட்டே இருக்கிறார். இப்படி எக்கச்சக்க அனுபவம் இருப்பதால் நெருக்கடியான தருணங்களில் இந்த மூவர் கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம்.



அங்கித், ரோஹித், கென்யாவின் டேனியல் ஒடிம்போ, சஜின் என அணியில் ஏகப்பட்ட ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அதுவும் அங்கித், ரோஹித் இருவரின் மீதும் நிறையவே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆட்டத்தின் சூழலுக்கேற்ப கோச் நரேந்தர் ரேது இவர்களை சரியாக பயன்படுத்தும்பட்சத்தில் பலமான அணியாக உருமாறிவிடும் பாட்னா.

பலவீனம்

கடந்த சில சீசன்களாக அணியின் தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்த ஆல்ரவுண்டர் ஷாத்லூவை ஏலத்தில் கோட்டைவிட்டுவிட்டார்கள். என்னதான் நீரஜ், மணிஷ், நவீன் ஷர்மா என பாட்னா பைரேட்ஸோடு பலகாலம் பயணிக்கும் டிபென்டர்கள் இருந்தாலும் ஷாத்லூ இல்லாத வெற்றிடத்தை அணி உணர்வது நிச்சயம். ரைட் கார்னரில் ஆடப்போகும் க்ரிஷன் துல் போன சீசனில் டெல்லி அணிக்காக களம் கண்டார். தொடக்க சில ஆட்டங்களில் மிரட்டியவர் அடுத்தடுத்து அப்படியே மங்கி ஒருகட்டத்தில் காணாமலேயே போனார். சீரான ஃபார்மை இந்த சீசன் முழுக்க அவர் தக்கவைக்க வேண்டியது அவசியம். சீனியர் நீரஜின் ஃபார்மும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

கவனிக்க வேண்டிய பிளேயர்

'எல்லாத் திறமையும் இருந்தும் ஏன் இவர் மேல போதுமான வெளிச்சம் இல்ல?' என சில பிளேயர்களைப் பார்த்து நமக்குத் தோன்றுமே. சச்சின் அந்த ரகம். அஜய் தாக்கூர், ராகுல் செளத்ரி, ரோஹித் குமார் என சீனியர் பிளேயர்களைவிட பி.கே.எல்லில் அதிக சராசரி வைத்திருப்பவர். இந்திய அணிவரை சென்றுவிட்டார். ஆனாலும் அண்டர்ரேட்டட் பிளேயராகவே வலம்வருகிறார். இந்த சீசனில் இவர் முதன்மை ரெய்டராக ஆடும்பட்சத்தில் சுதந்திரமாக பிரஷர் இல்லாமல் தன் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பலாம்.

ப்ளேயிங் செவன்

டிபென்ஸில் நான்கு பொசிஷன்களில் மூன்றில் ஆட்கள் செட். லெப்ட் கார்னரில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட அங்கித்தை அணி நிர்வாகம் பயன்படுத்தவே வாய்ப்புகள் அதிகம். அதன்படி ப்ளேயிங் செவன் இது.

சச்சின் (ரைடர்), மஞ்சித் (ரைடர்), ராகேஷ் நர்வால் (ரைடர்), சஜின் சந்திரசேகர் (லெப்ட் கவர்), நீரஜ் குமார் (கேப்டன் - ரைட் கவர்), அங்கித் (லெப்ட் கவர்), க்ரிஷன் துல் (ரைட் கவர்)

ஒருகாலத்தில் பாட்னா பைரேட்ஸோடுவோடு மோதவே அணிகள் யோசித்தது உண்டு. இன்றோ எளிதாய் புலப்படும் பலவீனங்களோடு களம்காணக் காத்திருக்கிறது. இழந்த பெருமையை மீட்டெடுக்க அதீதமாய் போராடவேண்டியது அவசியம். அந்தப் பொறுப்பு அவ்வணியின் டிபென்டர்களிடமே நிறைய இருக்கிறது. இளம் ரத்தம் முன்னோக்கிப் பாயுமா தடுமாறி நிற்குமா என்பதை இந்த இரண்டு மாதங்களில் பார்ப்போம்.