Pro kabaddi league Pro kabaddi league
கபடி

ப்ரோ கபடி லீக் சீசன் 10: டாப் 3 ரெய்டர்கள் & டிஃபண்டர்கள்

கடந்த ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியிருந்த தமிழ் தலைவாஸ் இந்த ஆண்டு ஒன்பதாவது இடமே பிடித்தது.

Viyan

இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு லீகுகளின் ஒன்றான ப்ரோ கபட் லீகின் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இறுதிப் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸை 28-25 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது புனேரி பால்டன்ஸ். இதன் மூலம் முதல் முறையாக அந்தத் தொடரை வென்று சரித்திரம் படைத்தது அந்த அணி. இந்த ஒட்டுமொத்த சீசனிலும் மொத்தமே 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது அந்த இளம் புனேரி அணி. அதேசமயம் கடந்த ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியிருந்த தமிழ் தலைவாஸ் இந்த ஆண்டு ஒன்பதாவது இடமே பிடித்தது. விளையாடிய 22 போட்டிகளில் 9 வெற்றிகள் மற்றும் 13 தோல்விகளை பதிவு செய்த தமிழ் தலைவாஸ் மொத்தம் 51 புள்ளிகளே பெற்றது. வழக்கம்போல் மொத்தமாக சொதப்பி தெலுங்கு டைட்டன்ஸ் கடைசி இடம் பிடித்தது.

இந்த சீசனில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்திய டாப் 3 ரெய்டர்கள் மற்றும் டிஃபண்டர்கள் யார்?

ரெய்டர் #1: அஷு மாலிக்

Ashu Malik

மொத்த புள்ளிகள்: 280
ரெய்ட் புள்ளிகள்: 276
வெற்றிகரமான ரெய்ட்கள்: 228
மேற்கண்ட அனைத்து ஸ்டேட்களிலும் இந்த சீசன் முதலிடம் பிடித்தது அஷு மாலிக் தான். ஒரு போட்டிக்கு 12 புள்ளிகள் வீதம் தொடர்ச்சியாக ஸ்கோர் செய்தார் அஷு. ப்ரோ கபடியின் நட்சத்திர ரெய்டரான நவீன் குமார் இல்லாத நிலையில், அணியில் பெரும் குழப்பங்கள் எழுந்திருந்த நிலையில், முன்னின்று அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றார் அஷு. அவரை ஆட்டமிழக்கச் செய்வது எந்த அணிக்குமே கடினமான சவாலாக இருந்தது. 15 முறை சூப்பர் 10 பதிவு செய்த அவர், கடைசி கட்டத்தில் பெரும் விஸ்வரூபம் எடுத்தார். கடைசி 3 போட்டிகளில் மட்டும் மொத்தம் 54 புள்ளிகள் குவித்தார்!

ரெய்டர் #2: அர்ஜுன் தேஷ்வால்

Arjun Deshwal

மொத்த புள்ளிகள்: 278
ரெய்ட் புள்ளிகள்: 276
வெற்றிகரமான ரெய்ட்கள்: 212
நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் அர்ஜுன். 17 போட்டிகளில் சூப்பர் 10களை பதிவு செய்த அவர், அந்த அணி லீக் சுற்றில் இரண்டாம் இடம் பிடிப்பதற்கு மிகமுக்கியக் காரணமாக அமைந்தார். ஹரியானா ஸ்டீலர்ஸுக்கு எதிரான அரையிறுதியிலும் கூட அவர் தனி ஆளாகப் போராடினார். மற்ற வீரர்கள் கைகொடுத்திருந்தால் நிச்சயம் அவர் ஜெய்ப்பூரை மீண்டும் ஃபைனலுக்கு அழைத்துச் சென்றிருப்பார்.

ரெய்டர் #3: பவன் செராவத்

pawan

மொத்த புள்ளிகள்: 217
ரெய்ட் புள்ளிகள்: 202
வெற்றிகரமான ரெய்ட்கள்: 156
அணியின் செயல்பாடு படுமோசம் தான். சொல்லப்போனால் பவன் செராவத்தின் செயல்பாடு கூட அவ்வளவு சிறப்பாக இல்லை தான். ஆனால், கடைசி கட்டத்தில் குறைந்தபட்சம் அவர் தன்னுடைய பழைய ஃபார்மையாவது வெளிப்படுத்தினார். பல்வேறு போட்டிகளில் தனி ஒரு ஆளாகப் போராடி தன் அணியை மீட்க முயன்றார். தொடக்கத்தில் பல தவறுகள் செய்தார். தன் பயிற்சியாளரால் சில போட்டிகளில் வெளியேவும் அமரவைக்கப்பட்டார். ஆனால் தொடரின் இறுதியில் பவன் செராவத்தாக மீண்டு வந்திருக்கிறார்.

டிஃபண்டர் #1: முகமதுரஸா சியானி

Mohammadreza Chiyaneh

மொத்த புள்ளிகள்: 126
டேக்கிள் புள்ளிகள்: 99
வெற்றிகரமான டேக்கிள்கள்: 97
புனேரி பால்டன் அணி பட்டையைக் கிளப்ப மிகமுக்கியக் காரணமாக விளங்கினார் சியானி. 11 போட்டிகளில் 'ஹை 5' பதிவு செய்தார். 164 டேக்கிள்களை முயற்சி செய்த அவர், 59 சதவிகித டேக்கிள்களை வெற்றிகரமாக முடித்தார். அதில் இரண்டு சூப்பர் டேக்கிள்கள். ஒரு போட்டியில் சராசரியாக 4.12 டேக்கிள்களை வெற்றிகரமாக செய்து தான் எப்பேர்ப்பட்ட சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார் சியானி.

டிஃபண்டர் #2: கிரிஷன்

Krishan Dhull

மொத்த புள்ளிகள்: 78
டேக்கிள் புள்ளிகள்: 78
வெற்றிகரமான டேக்கிள்கள்: 73
தபாங் டெல்லி அணியில் ஓரளவு சுமாராக செயல்பட்டுக்கொண்டிருந்த கிரிஷன், பாட்னா பைரேட்ஸ் அணி இந்த ஆண்டு தன்னில் ஏன் முதலீடு செய்தது என்பதைக் காட்டினார். மிகவும் துடிப்பாக இருந்த அவர், நிறைய டேக்கிள்களை முயற்சி செய்தார். அதில் 44% டேக்கிள்களை வெற்றிகரமாகவும் செய்தார். 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 5 டேக்கிள் புள்ளிகளாவது பதிவு செய்தார் அவர்.

டிஃபண்டர் #3: யோகேஷ்

மொத்த புள்ளிகள்: 77
டேக்கிள் புள்ளிகள்: 74
வெற்றிகரமான டேக்கிள்கள்: 68
தபாங் டெல்லி அணியின் வலது கார்னரில் மிகப் பெரிய அரணாக விளங்கினார் யோகேஷ். 54 சதவிகித டேக்கிள்களை வெற்றிகரமாக செய்து முடித்த அவர் 5 முறை 'ஹை 5' எடுத்தார். மொத்தம் 6 சூப்பர் டேக்கிள்களை இந்த சீசனில் அரங்கேற்றினார் அவர்.