Naveen kumar Dabang Delhi
கபடி

Dabang Delhi | 2K கிட் டெல்லிக்கு கோப்பையை பெற்றுத் தருவாரா..!

வெற்றி தோல்வியை மாறி மாறி சந்தித்துவரும் தபாங் டெல்லி அந்தக் காம்பினேஷனை மாற்றி தொடர் வெற்றிகளைக் கைக்கொள்ள இந்தமுறை அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் + துடிப்பான இளம் வீரர்கள் என்கிற காம்பினேஷனைக் கையிலெடுத்திருக்கிறது.

Nithish

டெல்லி அணியைப் பொறுத்தவரை ஐ.பி.எல், பி.கே.எல் இரண்டிலும் ஸ்கிரிப்ட் ஒன்றுதான். ஆரம்ப காலங்களில் சுமாராய் ஆடிவிட்டு சமீபத்திய சீசன்களில் முக்கியமான அணியாய் உருவெடுத்திருக்கிறார்கள். ஒரே வித்தியாசம் ஐ.பி.எல்லில் அவர்கள் இன்னும் கப் அடிக்கவில்லை. பி.கே.எல்லில் எட்டாவது சீசன் சாம்பியன் டெல்லிதான். இந்த முறையும் கப் அடிக்க இளம் கேப்டன் நவீன் குமாரின் தலைமையில் களமிறங்க உள்ளது டெல்லி. யெஸ், நவீன் ஒரு 2கே கிட்.

பிரதான வீரர்களில் நவீனை மட்டும்வைத்துக்கொண்டு மீதி அனைவரையும் ஏலத்திற்கு முன்னால் விடுவித்துவிட்டார்கள். அதிலும் டிபென்ஸ் கூடாரம் மொத்தமாகவே காலி. அதனால் இருக்கும் காசில் டிபென்டர்களை எடுத்துப் போடுவார்கள் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால் டெல்லி நிர்வாகம் செய்ததோ வேறு. அஷு மாலிக்கை எஃப்.பி.எம் ஆப்ஷன் மூலமாகவும் ரெய்டர் மீட்டுவை ஏலத்திலும் மொத்தமாய் 1.9 கோடிக்கு எடுத்தார்கள். மீதி இருந்த காசிற்குத்தான் டிபென்டர்கள். ஆனால் அவர்களின் நல்ல நேரம் சீனியர் வீரர்களான விஷால் பரத்வாஜும் சுனிலும் ஃபார்ம் அவுட் காரணமாக அடிப்படை விலையிலேயே கிடைத்தார்கள். இப்படி தட்டுத் தடுமாறி உருவாக்கிய அணியில் கோப்பை அடிக்கக் கனவு காணும் அணி நிர்வாகத்தின் எண்ணம் பலிக்க வாய்ப்பு இருக்கிறதா?

பலம்

புயல் வேகத்தில் பறக்கும் நவீன் எக்ஸ்பிரஸ்தான். குழந்தை முகத்தோடு எதிரணியை அலறவிடும் சேட்டைக்காரர். ஆடியிருப்பது நான்கே சீசன்கள்தான். 85 போட்டிகளில் 934 பாயின்ட்கள். பி.கே.எல் வரலாற்றிலேயே அதிக சராசரி வைத்திருப்பது நவீன் தான். சராசரி 11. தொடர்ச்சியாய் 28 ஆட்டங்களில் பத்து புள்ளிகளுக்கு மேல் எடுத்திருக்கும் ஒரே வீரர். லிஸ்ட்டில் இவருக்கு அடுத்த இடத்திலிருக்கும் சூப்பர்ஸ்டார் பவன் ஷெராவத்தால் தொடர்ச்சியாய் 13 ஆட்டங்களில் மட்டுமே பத்து புள்ளிகளுக்கு மேல் எடுக்க முடிந்திருக்கிறது என்கிற டேட்டாவே சொல்லும் இந்த பட்டாசின் பெருமையை. இரண்டாவது, மூன்றாவது ரெய்டர்களான அஷு மாலிக்கும் மீட்டுவும் நவீனுக்கு பக்கபலமாய் கிடைத்த கேப்பில் பாயின்ட்களை சேர்க்கும் திறன் வாய்ந்தவர்கள்.

பலவீனம்

முன் சொன்னது போல லெப்ட் கார்னரில் ஆடும் விஷால் பரத்வாஜும் ரைட் கார்னரில் ஆடும் சுனிலும் சீனியர்கள் என்றாலும் அவர்களின் சமீபத்திய ஃபார்ம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடந்த இரண்டு சீசன்களில் 39 போட்டிகளில் ஆடி 92 புள்ளிகள் மட்டுமே எடுத்திருக்கிறா விஷால். சுனிலின் கணக்கோ 44 போட்டிகளில் 91 புள்ளிகள். கார்னர் டிபென்டர்களுக்கு இந்த சராசரி மிகவும் குறைவு. விஷால் இந்திய அணிக்காக தற்போது ஓரளவுக்கு ஆடிவருவதுமட்டும்தான் அணிக்கு ஒரே ஆறுதல்.

கார்னர் டிபென்டர்களுக்காவது அனுபவமும் பக்குவமும் இருக்கிறது, பார்ம்தான் இல்லை கவர் டிபென்டர்கள் நிலைமை அதைவிட மோசம். கவரில் ஆட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் பாபாசாஹேப் ஜாதவுக்கு பி.கே.எல் அனுபவம் மிகக் குறைவு. மற்றொரு கவர் வீரரான ஹிம்மத் அன்டிலுக்கும் அதுவுமில்லை. இவர்கள் பிரஷரை எப்படித் தாங்குவார்கள் என்பதைப் பொறுத்தே அணியின் ரேங்க்கும் இருக்கும்.

கவனிக்கப்பட வேண்டிய வீரர்

அஷு மாலிக். எட்டாவது சீசனில் நவீன் காயத்தால் அவதிப்பட்டபோது உள்ளே வந்தவர். அப்போது கிடைத்த வாய்ப்பை இவர் புள்ளிகளாக மாற்ற கடந்த சீசனில் இரண்டாவது ரெய்டராக ப்ரொமோஷன் கிடைத்தது. 23 போட்டிகளில் 158 பாயின்ட்கள். இந்த முறை இவர் என்ன செய்யக் காத்திருக்கிறார் என்பதுதான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. போக, மீட்டுவிற்கும் இவருக்கும் இடையில் ஆரோக்கியமான போட்டி நிலவும் என்றும் நம்பலாம்.

ப்ளேயிங் செவன்

அணியின் போக்கைப் பொறுத்து கவர் பொசிஷன்களில் மாற்றம் இருக்கலாம். ஆனால் சீசனின் தொடக்க ஆட்டங்களுக்கு இதுதான் ப்ளேயிங் செவனாய் இருக்கக்கூடும்.

நவீன் குமார் (கேப்டன் - ரைடர்), அஷு மாலிக் (ரைடர்), மீட்டு (ரைடர்), ஹிம்மத் அன்டில் (லெப்ட் கவர்), பாலாசாஹேப் ஜாதவ் (ரைட் கவர்), விஷால் பரத்வாஜ் (லெப்ட் கவர்), சுனில் (ரைட் கவர்)

வெற்றி தோல்வியை மாறி மாறி சந்தித்துவரும் தபாங் டெல்லி அந்தக் காம்பினேஷனை மாற்றி தொடர் வெற்றிகளைக் கைக்கொள்ள இந்தமுறை அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் + துடிப்பான இளம் வீரர்கள் என்கிற காம்பினேஷனைக் கையிலெடுத்திருக்கிறது. ஒருவேளை வென்றால் பி.கே.எல் கோப்பை வென்ற இரண்டாவது இளம் கேப்டன் என்கிற மற்றுமொரு சாதனைக்கு சொந்தக்காரராவார் நவீன்.