ajinkya pawar Tamil Thalaivas
கபடி

Tamil Thalaivas | கோப்பையைக் கைப்பற்றுமா தமிழ் தலைவாஸ்..?

தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பட்டைதீட்டுவது தமிழ்தலைவாஸின் சமீபத்திய வழக்கம். அஜித் குமார், அபிஷேக் போன்றவர்கள் எல்லாம் அப்படி வளர்ந்தவர்கள்தான். அந்தவகையில் இந்த முறை இருவீரர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் மாசானமுத்து லஷ்மணன்.

Nithish

ஸ்போர்ட்ஸை பொறுத்தவரை அது எந்த ஸ்போர்ட்ஸாக இருந்தாலும் சரி, சென்னை அணிக்கு நல்ல ராசிதான். ஐ.பி.எல்லில் சொல்லவே வேண்டாம். அதற்கு முந்தைய ஐ.சி.எல்லில் கூட முதல் சீசனில் சென்னைதான் சாம்பியன். கால்பந்து லீக்கான ஐ.எஸ்.எல்லில் சென்னையின் எஃப்.சி இரண்டு முறை சாம்பியன். அவ்வளவு ஏன், பேட்மின்டன் லீக்கில் கூட கோப்பை அடித்திருக்கிறது சென்னை அணி. இந்த யோகம் செல்லுபடியாகாத ஒரே ஏரியா கபடிதான். 'கைபிடி' என உலகிற்கு சொல்லிக்கொடுத்த தமிழகத்திற்கு இன்னமும் பி.கே.எல் எட்டாக் கனவாய் இருப்பதுதான் பெருஞ்சோகம். கிளப் விளையாட்டுகளைப் பொறுத்தவரை பெயருக்கென ஒன்றிரண்டு பேர்தான் சொந்த மண்ணைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள் என்றாலும் பெருமை என்னவோ ஊருக்குத்தானே. ஏன் பி.கே.எல்லில் மட்டும் தமிழ் தலைவாஸ் அணிக்கு தோல்வி முகம்? அணி நிர்வாகம் கடந்த காலத்தில் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் தவறான விளைவுகளையே பரிசாகக் கொடுத்ததுதான்.

பி.கே.எல்லின் முதல் நான்கு சீசன்களில் தமிழகத்தின் பிரதிநிதியாக ஒரு அணி இல்லவே இல்லை. கபடியின் பிறப்பிடமான தமிழகத்திற்கே அணி இல்லையா எனத் தொடர்ந்து குரல்கள் எழ, லீக் விரிவாக்கத்தின்போது தமிழ் தலைவாஸ் அணி உருவானது. முதல் சீசனிலேயே முத்திரை பதிக்கவேண்டுமென முன்னாள் இந்திய கேப்டன் அஜய் தாக்கூர் தலைமையில் சீனியர் வீரர்களை எல்லாம் தேர்ந்தெடுத்து அணியில் சேர்த்தார்கள். ஜஸ்வீர் சிங், மஞ்சித் சில்லர், அமித் ஹூடா, ரண் சிங், ராகுல் செளத்ரி என அடுத்தடுத்த சீசன்களில் பெரிய பெரிய வீரர்கள் எல்லாம் இருந்தார்கள்தான். ஆனால் வெற்றி மட்டும் கிட்டவே இல்லை. காரணம் சீனியர்களுக்கிடையிலான ஈகோ. களத்திலேயே அது அப்பட்டமாக வெளிப்பட்டது. கேப்டன் அஜய் தாக்கூரை மஞ்சித் சில்லர் கடிந்துகொள்வார். ஜஸ்வீர் சிங்கோ யார் என்ன சொன்னாலும் அவருக்குத் தோன்றியதைத்தான் செய்வார். இப்படியான சூழல் அணிக்கும் வீரர்களுக்குமே நல்லதில்லை எனத் தோன்றியபின் தான் நிர்வாகம் ஒரு முடிவெடுத்தது.

இளம் வீரர்களிடம் பொறுப்பைக் கொடுப்பது என்பதே அது. கேப்டனாய் இந்திய அணியின் சுர்ஜித்தை தேர்ந்தெடுத்து அவரைச் சுற்றி மஞ்சித், சாகர், சாஹில் குலியா, மோஹித், ஹிமான்ஷு என இளம் வீரர்களை அமர்த்தியது. இது நடந்தது எட்டாவது சீசனில். ரிசல்ட்டில் பெரிதாய் மாற்றமில்லை. ஆனால் இந்த பிராசஸில் பல இளம் வீரர்களை பட்டைதீட்ட முடிந்தது. அதுவே முதல்முறையாக ஒன்பதாவது சீசனில் தமிழ் தலைவாஸ் ப்ளே ஆப்பிற்குள் தகுதி பெற முக்கியக் காரணம். மற்றொரு பிரதான காரணம் கோச் அஷன் குமார்.

Coach ashan kumar.

அஷன் பயிற்சியாளராய் பொறுப்பேற்பதற்கு முன்புவரை தமிழ் தலைவாஸ் முதல் பாதியில் வெற்றிக்காக விளையாடுவார்கள். ஒரு சில புள்ளிகள்தான் இரு அணிகளுக்கும் வித்தியாசம் என்றால் இரண்டாம்பாதி முழுக்க டிரா செய்வதற்காகவே போராடுவார்கள். போன சீசனின் தொடக்க சில ஆட்டங்கள்வரை அதுதான் நிலைமை. பி.கே.எல் போட்டிகளில் அதிக டிரா சதவீதம் வைத்திருக்கும் அணி தமிழ்தலைவாஸ்தான். கடந்த சீசனின் கோச் உதயகுமார் பாதியிலேயே வெளியேற, பின் வந்தவர்தான் அஷன். அந்த நேரம் பவனும் காயம் காரணமாக அணியில் இல்லை. அதைப் பற்றியெல்லாம் கவலையேபடாமல் வந்தவேகத்தில் அணியின் அணுகுமுறையை தலைகீழாக மாற்றினார்.

அதன்பின் ரசிகர்கள் பார்த்தது தமிழ்தலைவாஸ் 2.0. இறுதிநொடி வரை அட்டாக் மோடிலேயே ஆடினார்கள். நரேந்தர் கண்டோலா என்கிற அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் வெளிப்பட்டார். டிபென்டர்களுக்கு 'எதைப்பற்றியும் கவலைப்படாதே' என ஃப்ரீ லைசென்ஸ் கொடுக்கப்பட, பாய்ந்து பாய்ந்து தடுத்தார்கள். இப்படி மொத்தமாய் உருமாறிய அணியைப் பார்த்து எதிரணிகள் தடுமாற, பரிசாய் வந்தது ப்ளே ஆஃப் இடம்.

இந்தமுறை ஏலத்திற்கு முன்னதாய் பவன் ஷெராவத்தை விடுவித்தார்கள். வேறு வழியும் இல்லை. லீக்கின் காஸ்ட்லி பிளேயரை ஏலத்திற்கு முன் விடுவிப்பது பி.கே.எல்லில் தவிர்க்கமுடியாத விஷயம். ஆனால் அவருக்கு மாற்றாய் ஒரு சீனியர் வீரரை வாங்க முடியவில்லை. பதிலுக்கு செல்வமணி, மாசானமுத்து லஷ்மணன், சதீஷ் கண்ணன் என மண்ணின் மைந்தர்களை கோப்பை வெல்வதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர்களோடு கடந்த சீசனில் ஆடிய பெரும்பாலான வீரர்களும் தக்கவைக்கப்பட, வரலாற்றை மாற்றி எழுதிவிடலாம் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறது தமிழ்தலைவாஸ்.

பலம்

முன்பே சொன்னது போல கோச் அஷன் குமார். சினிமாவில் எல்லாம் புது கோச் வந்தவுடன் அணி ஃபீனிக்ஸ் பறவையாய் மாறிப் பறக்குமே அப்படியொரு ஸ்கிரிப்ட்டை கடந்த சீசனில் எழுதிக்காட்டியவர். இவரின் வியூகங்களும் அணுகுமுறையும் அணிக்கு பெரும்பலம்.

நரேந்தர் கண்டோலா - சென்னை அணியின் சுட்டிக்குழந்தை. பார்ப்பதற்கு பேக் மாட்டிக்கொண்டு ஐ.டி வேலைக்குச் செல்லும் இளைஞரைப் போலத்தான் இருப்பார். ஆனால் கடந்தமுறை களத்தில் இவர் காட்டிய வேகத்தில் அசந்துபோயின எதிரணிகள். 23 போட்டிகளில் 249 புள்ளிகள். சராசரி 10.8. சீசனின் மொத்தப் புள்ளிகள் பட்டியலில் நான்காமிடம். இந்த முறை இவரே அணியின் முதன்மை ரைடர் என்பதால் இவரைத்தான் பெருமளவிற்கு நம்பியிருக்கிறது அணி.

சீனியர்கள் என யாருமில்லை. டிபென்ஸ் முழுக்கவே இளரத்தம்தான். ஆனால் பயமறியாது கலக்குகிறார்கள். கடந்த சீசனின் இரண்டாவது பெஸ்ட் டிபென்ஸ் அணி தமிழ்தலைவாஸ் தான். கார்னரில் சாகரும், சாகுலும் யாரையும் காலே வைக்கவிடாமல் பார்த்துக்கொள்ள கவரில் அபிஷேக்கும் மோஹித்தும் வந்தவர்களை எல்லாம் முட்டி வெளியே தள்ளினார்கள். அந்த ஃபார்ம் அப்படியே தொடரும்பட்சத்தில் வெற்றிகள் பல நிச்சயம். இவர்கள் தவிர்த்து அமீர்ஹுசேன் பஸ்தாமி, முகமதுரேஸா கபுத்ரஹங்கி என இரு ஈரானிய டிபென்டர்களையும் இரண்டுமடங்கு விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள். அணியின் போக்கைப் பொறுத்து இவர்களும் களம் காணலாம்.

அணியின் Do or Die ஸ்பெஷலிஸ்ட் அஜிங்கயா பவார். தொடர்ந்து இரண்டுமுறை ஒரு அணி புள்ளிகள் இல்லாத ரெய்டுகள் சென்றால் மூன்றாவது ரெய்டு டூ ஆர் டை ரெய்டாகிவிடும். இந்த ரெய்டில் ரெய்டர் புள்ளிகள் எடுத்தே ஆகவேண்டும். இல்லையென்றால் அவர் அவுட். இந்த ரெய்டில் பவார் கில்லி. கடந்த முறை இந்த ரெய்டில் அதிக புள்ளிகள் எடுத்த இரண்டாவது அணி சென்னைதான். காரணம் அஜிங்கியா பவார்.

பலவீனம்

அணியில் பலவீனங்களும் இல்லாமல் இல்லை. நரேந்தருக்கு ஒரே ஒரு சீசன் தான் அனுபவம். ஓரளவு சீனியர் என்றால் அஜிங்கியா பவார்தான். செல்வமணி சீனியர் தான் என்றாலும் போன சீசனில் அவர் விளையாடவே இல்லை. அதற்கு முந்தைய இரண்டு சீசன்களுக்கும் சேர்த்து மொத்தமே பத்து போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். ரெய்டிங் டிபார்ட்மென்ட்டில் பேக்கப் வீரர்களுமே ஒரு சீசன் அனுபவம் அல்லது அனுபவமே இல்லாத வீரர்கள்தான். பி.கே.எல்லை போன்ற இரண்டு மாத நெடிய தொடரில் முதன்மை ரெய்டருக்கு காயம் ஏற்பட்டால் என்னாவது என்கிற கவலை இப்போதே எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது.

கவரில் விளையாடும் தமிழக வீரர் அபிஷேக் கடந்த முறை சில ஆட்டங்களில் மிகச் சிறப்பாக ஆடினார். ஆனாலும் முக்கியமான நேரத்தில் அவரின் அவசரம் அணிக்கு பின்னடைவாக இருந்திருக்கிறது. அந்த அணுகுமுறையை இந்த முறை மாற்றியிருப்பார் என நம்பலாம்.

கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள்

கேப்டன் சாகர்

கேப்டன் சாகர். மூன்று சீசன்களாக தமிழ்தலைவாஸின் டிபென்ஸ் தூண். 52 ஆட்டங்களில் 158 புள்ளிகள். இதே வேகத்தில் சென்றால் இன்னும் இரண்டு சீசன்களில் ஆல்டைம் பெஸ்ட் டிபென்டர்களுள் ஒருவராக உருவெடுத்துவிடுவார். போன முறை பவன் காயம் காரணமாக தற்காலிக கேப்டன். இந்தமுறை முழுக்கவே பொறுப்பு இவர் கைவசம். மாயங்கள் பல நிகழ்த்துவார் என நம்பலாம்.

தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பட்டைதீட்டுவது தமிழ்தலைவாஸின் சமீபத்திய வழக்கம். அஜித் குமார், அபிஷேக் போன்றவர்கள் எல்லாம் அப்படி வளர்ந்தவர்கள்தான். அந்தவகையில் இந்த முறை இருவீரர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் மாசானமுத்து லஷ்மணன். தூத்துக்குடிக்காரர். ஏலத்தில் டி பிரிவு ரெய்டர்களில் அதிக டிமான்ட் இவருக்குத்தான். அடிப்படை விலை ஒன்பது லட்சத்திலிருந்து அணிகள் போட்டி போட, கடைசியாய் 31 லட்சத்திற்கு தமிழ்தலைவாஸ் வசம் வந்தார். மற்றொருவர் சதீஷ் கண்ணன். திருச்சிக்காரர். இவருக்காகவும் அணிகள் போட்டிபோட, இரண்டு மடங்கு கொடுத்து வாங்கியது தமிழ் தலைவாஸ். மூன்றாவது ரைடராக இவர்களில் ஒருவர் அதிக போட்டிகளில் ஆட வாய்ப்புகள் அதிகம்.

ப்ளேயிங் செவன்

மூன்றாவது ரைடர் இடத்திற்கு செல்வமணி, லஷ்மணன், சதீஷ் என ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருந்தாலும் போன சீசன் ஆடிய ஹிமான்ஸுதான் தொடக்க சில ஆட்டங்களில் களமிறங்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல டிபென்ஸிலும் கபுத்ரஹங்கி கவர், கார்னர் இரண்டிலும் ஆடக்கூடியவர் என்பதால் ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து அவர் களமிறங்கலாம்.

நரேந்தர் (ரைடர்), அஜிங்கியா பவார் (ரைடர்), ஹிமான்ஸு (ரைடர்), மோஹித் (லெப்ட் கவர்), அபிஷேக் (ரைட் கவர்), சாஹில் குலியா (லெப்ட் கார்னர்), சாகர் (ரைட் கார்னர்)

டிபென்ஸில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் அணி, ரெய்ட் டிபார்ட்மென்ட்டில்தான் பலவீனமாகத் தெரிகிறது. ஆனால் கடந்த சீசனில் பவன் காயத்திற்குப் பின் இப்படி இருந்த அணியைத்தான் அரையிறுதி வரை வழிநடத்திச் சென்றார் அஷன். இந்தமுறையும் அதே இளைஞர் படை மீது பெருநம்பிக்கை வைத்து பொறுப்புகளை பகிர்ந்தளித்திருக்கிறார். அவர்களும் அதை உணர்ந்து செயல்படும்பட்சத்தில் கோப்பைக் கனவு கட்டாயம் நனவாகும்.