Pro Kabaddi League pt
கபடி

2024 புரோ கபடி லீக் | தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பிரிவியூ! பலம், பலவீனம் என்ன?

2024 புரோ கபடி லீக்கானது வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 9-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

Nithish

இந்திய விளையாட்டுலகைப் பொறுத்தவரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மூன்று மாதங்களும் மிக முக்கியமானவை. ஒருபக்கம் நாட்டின் மிகப்பெரிய லீக்கான ஐ.பி.எல்லில் வீரர்களை தக்கவைப்பது, ஏலத்தில் எடுப்பது போன்ற முக்கிய முடிவுகள் மும்முரமாய் எடுக்கப்படும். மறுபக்கம் பி.கே.எல், ஐ.எஸ்.எல் போன்ற மற்ற பெரிய தொடர்களும் தொடங்கும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஐ.பி.எல் கமிட்டி மாற்றியிருக்கும் விதிமுறைகளால் யாரைத் தக்க வைப்பது, யாரை விடுவிப்பது என அணி நிர்வாகங்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்க, தோனி அன்கேப்ட் பிளேயராக களமிறங்குவாரா இல்லையா என ரசிகர்கள் பெட் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் அமைதியாக தொடங்கவிருக்கிறது இந்தியாவின் இரண்டாவது பெரிய லீக்கான 'புரோ கபடி லீக்'. அதெப்படி? கால்பந்து லீக்கான 'ஐ.எஸ்.எல்' தானே இரண்டாவது இடத்தில் இருக்கும்' என சிலர் சண்டைக்கு வரலாம். With all due respect, புரோ கபடி லீக்கின் பார்வையாளர் எண்ணிக்கை 20 கோடி. ஐ.எஸ்.எல்லுக்கு 13 கோடி. அதேபோல பி.கே.எல்லின் விளம்பர வருமானம் 350 கோடி, ஐ.எஸ்.எல்லுக்கு 270 கோடி. பெண்கள் கிரிக்கெட் லீக்கான WPL மெல்ல மெல்ல இரண்டாவது இடத்தை நோக்கி முன்னேறி வந்துகொண்டிருக்கிறது.

PKL 2024

இப்படி சத்தமில்லாமல் சாதித்துக்கொண்டிருக்கும் பி.கே.எல்லின் 11வது சீசன் வரும் 18ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அதில் விளையாடப்போகும் அணிகளின் பலம் பலவீனங்களைத்தான் வரிசையாக பார்க்கப்போகிறோம். முதலில் அப்படி நாம் ரிவ்யூ செய்யப்போகும் அணி 'தெலுங்கு டைட்டன்ஸ்'.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி..

சென்னைவாசிகளுக்கு பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் வண்டிகள் எவ்வளவு பழக்கமோ, அந்தளவிற்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி ரசிகர்களுக்கு தோல்விகள் பழக்கம். முதல் நான்கு சீசன்கள் ஆஹா ஓகோவென ஆடிய அணிக்கு யார் என்ன செய்வினை வைத்தார்களோ, அதன்பின் தொட்டதெல்லாம் சறுக்கல்தான். சூப்பர்ஸ்டார் பிளேயர்களாக பார்த்து ஏலத்தில் எடுத்தாலும் அவர்களிடையே நிலவும் ஈகோ அணியின் வெற்றியை பாதிக்கும். சரி டீமுக்கு ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் போதும் என எடுத்தால் அவர் சரியாக தொடரின் முதல் பாதியில் காயமடைந்து வெளியேறிவிடுவார். அதன்பின் கடனுக்கு ஆடி கடைசி இடம் பிடிப்பார்கள். கடைசி மூன்று சீசன்களில் ஹாட்ரிக் கடைசி இடம். ஆடிய 66 ஆட்டங்களில் வெறும் ஐந்தில் மட்டுமே வெற்றி. திருவிழாக் கூட்டத்தில் வழியிலுள்ள பலூன்களை எல்லாம் குத்திக் குத்தி வெடிக்கவிட்டு நடப்பார்களே இளசுகள், அதேபோல மற்ற எல்லா அணிகளும் டைட்டன்ஸை போட்டு வெளுத்து பாயின்ட் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். இந்தமுறை அந்த பழக்கத்தை மாற்றியே ஆகவேண்டும் என களமிறங்கியிருக்கிறது அணி நிர்வாகம்.

ஏலத்தில் எதிர்பார்த்தபடியே சூப்பர் ஸ்டார் பவன் ஷெராவத்தை 1.75 கோடிக்கு ஆர்டிஎம்மில் எடுத்தார்கள். கடந்த முறை டிபென்ஸில் அநியாயத்திற்கு சொதப்பியதால் இந்தமுறை அவர்களுக்கு ஒரு துடிப்பான டிபென்டர் தேவைப்பட்டார். குறிவைத்து க்ரிஷன் துல்லை 70 லட்சத்திற்கு வாங்கினார்கள். டில்லி அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான விஜய் மாலிக்கை 20 லட்சத்திற்கும் மஞ்சித்தை 27 லட்சத்திற்கும் வாங்கினார்கள். மற்றவர்கள் எல்லாருக்கும் அடிப்படை விலையே.

பலம்:

அணியின் அசுர பலம் சந்தேகமே இல்லாமல் பவன் தான். பி.கே.எல்லில் அதிக புள்ளிகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாமிடம். 126 போட்டிகளில் 1254 புள்ளிகள். இன்னும் அதிகபட்சம் இரண்டு சீசன்களில் இரண்டாமிடத்திற்கு நகர்ந்துவிடுவார். தன்னந்தனியாளாக மேட்ச்சுக்கு குறைந்தது 12 புள்ளிகள் எடுப்பார். அவ்வப்போது டிபென்ஸிலும் கைகொடுப்பார். இந்திய கபடி அணிக்கே கேப்டன் என்பதால் அவருடைய அனுபவமும் அணிக்கு பெரிதாய் கைகொடுக்கும்.

சீசனுக்கு ஒரு கோச்சை மாற்றும் அணி நிர்வாகம் இந்த முறை நம்பி களமிறக்கியிருப்பது டெல்லி அணியை எட்டாவது சீசனில் சாம்பியனாக்கிய க்ரிஷன் குமார் ஹூடாவை. அனுபவம் வாய்ந்த மூத்த கோச், போக அணிக்குள்ளும் தனக்குக் கீழ் பயிற்சி பெற்ற மஞ்சித், விஜய் மாலிக் போன்றவர்களை அழைத்து வந்திருக்கிறார். களத்தில் இவர் வகுக்கும் வியூகங்கள் அணிக்கு மிகப்பெரிய பலம்.

ரெய்ட் ஏரியாவில் பவன் என்றால் டிபென்ஸ் ஏரியாவில் அணி பெரிதும் நம்பியிருப்பது க்ரிஷனை. முன்னாள் டெல்லி வீரரான இவர் கடந்த சீசனில் பாட்னா பைரேட்ஸ் அணியின் ரட்சகன். 24 போட்டிகளில் 78 புள்ளிகள் எடுத்து சீசனின் இரண்டாவது பெஸ்ட் டிபென்டராக வலம் வந்தவர். அதனால்தான் போட்டி போட்டு 70 லட்சத்திற்கு இவரை ஏலம் எடுத்திருக்கிறது அணி நிர்வாகம். அதே ஃபார்மை இந்த சீசனிலும் அவர் தொடரும்பட்சத்தில் எதிரணி வீரர்கள் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி வெடிக்கும்.

பலவீனம் :

கபடியைப் பொருத்தவரை ஒரு பெரிய சூப்பர்ஸ்டாரை அணியில் எடுக்கும்பட்சத்தில் அவருக்கே பெரிய தொகையை செலவிட வேண்டியிருக்கும், எஞ்சிய தொகையில் சின்ன சின்ன வீரர்களையே எடுக்க முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக டைட்டன்ஸ் அணிக்கு இந்த சிக்கல்தான். மொத்த பட்ஜெட்டில் 50 சதவீதம்வரை பவனுக்கே செலவழித்துவிட்டார்கள். அதனால் ரெய்டிங்கில் அவருக்கு பக்கபலமாய் சொல்லிக்கொள்ளும்படியான இரண்டாவது ரைடர் இல்லை. விஜய் மாலிக்கும் மஞ்சித்தும் மூன்றாவது ரைடராக களமிறங்கி பழக்கப்பட்டவர்கள். அவர்களால் பவன் இல்லாத நேரத்தில் எதிரணிக்கு ஈடு கொடுக்கமுடியுமா என்பது சந்தேகமே.

டிபென்ஸிலும் க்ரிஷனைத் தவிர கவனம் ஈர்க்கும்படியான வீரர்கள் இல்லை. அஜித் பவார், மிலாத் ஜப்ரி, அங்கித் என கடந்த சீசனில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியவர்களை தக்க வைத்திருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களுக்கு அதிகபட்சமே ஒரு சீசன் அனுபவமே இருப்பதால் டிபென்ஸில் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

கவனிக்கப்பட வேண்டிய வீரர் :

கடந்த சீசனில் டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமான நவீன் காயம் காரணமாக ஆறே போட்டிகளில்தான் ஆடினார். அவர் இடத்தை அஷு மாலிக் நிரப்ப, அஷுவுக்கு பக்கபலமாய் துணை ரெய்டராக இருந்தது மஞ்சித். இப்போது டைட்டன்ஸ் அணியிலும் பவனுக்குத் துணை தேவை என்பதால் மஞ்சித்தை 27 லட்சத்திற்கு விடாப்பிடியாய் வாங்கியிருக்கிறது அணி நிர்வாகம். போன சீசனைவிட இந்த சீசன் ஆட்ட நேரம் அதிகம் கிடைக்குமென்பதால் நிச்சயம் தன் முழுத்திறனை வெளிக்கொண்டுவருவார் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

ப்ளேயிங் செவன் :

மஞ்சித்தை அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதாலும் விஜய் மாலிக் அனுபவசாலி என்பதாலும் ப்ரஃபுல் ஜஃபாரே, ஓம்கார் பாட்டீல், சங்கர் கடாய் ஆகியோரைத் தாண்டி இந்த இருவர் ப்ளேயிங் செவனில் ஆடவே வாய்ப்புகள் அதிகம்.

பவன் ஷெராவத் (கேப்டன் - முதன்மை ரைடர்), விஜய் மாலிக், மஞ்சித், அஜித் பவார் (லெப்ட் கவர்), மிலாத் ஜப்ரி (ரைட் கவர்), அங்கித் (லெப்ட் கார்னர்), க்ரிஷன் துல் (ரைட் கார்னர்).

கடந்த சில சீசன்களாக கடைசி இடத்தை பட்டா போட்டு கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கும் இந்த அணி இந்தமுறை எப்படியாவது ப்ளே ஆஃப் சுற்றுக்காவது தகுதிபெற்றுவிடவேண்டும் என்கிற குறைந்தபட்ச குறிக்கோளோடு களமிறங்குகிறது. ஆனால், ப்ளே ஆஃப் அழைத்துச் செல்லும் வீரர்கள் அணியில் இருக்கிறார்களா என்றால் சந்தேகமே. பவன் இந்த சீசனில் சொதப்பினால் டைட்டன்ஸுக்கு நிரந்தரமாய் கடைசி இடத்தை தாரைவார்த்துக் கொடுத்துவிட வேண்டியதுதான்.