bengaluru bulls team web
கபடி

2024 புரோ கபடி லீக் | பெங்களூரு புல்ஸ் அணியின் பிரிவியூ! பலம், பலவீனம் என்ன?

2024 புரோ கபடி லீக்கானது வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 9-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

Nithish

பி.கே.எல்லின் பெங்களூரு அணியும் ஐ.பி.எல்லின் பெங்களூரு அணியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். கோர் டீம் மாறிக்கொண்டே இருந்தாலும் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டே இருப்பார்கள். ஆர்.சி.பி 17 ஆண்டுகளில் ஒன்பது முறை என்றால் பெங்களூரு புல்ஸ் பத்து ஆண்டுகளில் ஆறு முறை. ஒரே வித்தியாசம் பெங்களூரு புல்ஸ் அணியால் ஒருமுறை கோப்பையை வெல்ல முடிந்திருக்கிறது.

பவனை இரண்டு சீசன்களுக்கு முன் ஏலத்தில் கோட்டை விட்டதால் விகாஷ் கண்டோலா, பரத் இருவரை மட்டுமே மலைபோல நம்பியிருந்தது அணி. பெங்களூரு வந்த நேரமோ என்னவோ விகாஷ் ஃபார்ம் அவுட்டாகிவிட்டார். பரத் ஒன்பதாவது சீசனில் நன்றாக ஆடினாலும் கடந்த சீசனில் ரொம்பவே சொதப்பினார். அதனால் மொத்தமாய் ரெய்டிங் யூனிட்டை கலைத்துப்போட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது அணி நிர்வாகம்.

அணிக்குத் தேவையாய் இருந்தது ஒரு ரெய்டிங் முகம். ஸ்டார் பிளேயரும் பி.கே.எல்லில் அதிக புள்ளிகள் கொண்டவருமான பர்தீப் நர்வாலை 70 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தார்கள். ஒருவகையில் இது தாய்க்கழகத்திற்கு திரும்பிய அரசியல்வாதியின் கதைதான். பர்தீப் பி.கே.எல் கேரியரைத் தொடங்கியது இரண்டாவது சீசனில் பெங்களூரு அணிக்காகத்தான். அவரின் சமீபத்திய ஃபார்ம் கொஞ்சம் கவலைக்கிடமாய் இருப்பதால் அவருக்குத் துணையாய் ஒரு சீனியர் வேண்டுமென தமிழ் தலைவாஸின் தூணாய் இருந்த அஜிங்க்யா பவாரை 1.10 கோடி கொடுத்து வாங்கினார்கள். கூடவே மும்பைக்காக ஆடி கவனம் ஈர்த்த ஜெய் பகவானையும். அவரின் விலை 63 லட்சம்.

bengaluru bulls team

ரெய்டர்களுக்கே பாதிக்கும் மேல் செலவழித்துவிட்டதால் ஸ்டார் டிபென்டர்களை அவர்களால் வாங்கமுடியவில்லை. ஒரே ஆறுதல் ஆல்ரவுண்டரான நிதின் ராவல் அடிப்படை விலைக்கே அவர்களுக்குக் கிடைத்ததுதான். அவரைக் கொண்டு அணியின் சமநிலையை தக்கவைத்துவிடலாம் என நம்பிக் களமிறங்குகிறது புல்ஸ் அணி.

பலம்:

ஐ.பி.எல்லுக்கு கோலி என்றால் பி,கே.எல்லுக்கு பர்தீப் நர்வால். பி.கே.எல் வரலாற்றில் அதிக புள்ளிகள் ஸ்கோர் செய்த வீரர். 170 போட்டிகளில் 1699 புள்ளிகள். ரெய்ட் சராசரி 9.94. சீசனுக்கு குறைந்தது 200 பாயின்ட்கள் குவிப்பார். கடந்த சீசனில் கொஞ்சம் சொதப்பினாலும் கோச் ரன்தீர் ஷெராவத்தின் வழிகாட்டுதலில் ஃபார்மை மீட்டெடுப்பார் என நம்பலாம்.

பர்தீப்பை மட்டுமே நம்பி இருக்கமுடியாது என்பதால் டூ ஆர் டை ஸ்பெஷலிட்டான அஜிங்க்யா பவார், மின்னல் வேகத்தில் பாயின்ட்கள் எடுக்கக்கூடிய ஜெய் பகவான், கடந்த சீசனில் அணிக்காக கலக்கிய் சுஷில், துடிப்பான இளம்ம் வீரர் அக்‌ஷித் என பேக்கப் வீரர்களையும் பக்காவாக செட் செய்து வைத்திருக்கிறார்கள்.

கபடி ரசிகர்களுக்கு வீரர்களைத் தாண்டி மிகப் பரிச்சயமான பெயர் ரன்தீர் ஷெராவத். இந்திய ரயில்வே கபடி அணியின் ஆஸ்தான கோச். பெங்களூரு அணிக்காக முதல் சீசனிலிருந்தே கோச்சாக கெத்து காட்டுபவர். பி.கே.எல்லில் அதிக ஆண்டுகள் ஒரே அணிக்காக கோச்சாக இருக்கும் சாதனையும் இவருக்கு மட்டுமே சொந்தம். கிட்டத்தட்ட இந்த அணி இவரின் குழந்தை போல. அணியின் பலம், பலவீனம் எல்லாம் இவருக்கு அத்துப்படி என்பதால் இவர் வகுக்கும் களத்திட்டங்கள் அணிக்கு பெரிய பலம்.

பலவீனம்:

ஒருகாலத்தில் புல்ஸ் அணியின் டிபென்ஸை பார்த்தாலே எதிரணிகள் வெலவெலத்துப்போகும். சவுரப் நண்டல், மஹிந்தர் சிங், மயூர் கடம், அமன் என கவர், கார்னர் ஏரியாக்களில் நீங்கள் கால் வைக்கவே முடியாது.

ஆனால் லீக் தொடர்களின் பெரிய சிக்கலே அணிகள் இப்படி சிரமப்பட்டு பட்டை தீட்டும் வீரர்களை ஒருகாலக்கட்டத்திற்கு மேல் தக்கவைக்க முடியாது என்பதுதான். அந்தவகையில் மற்றவர்கள் எல்லாம் வேறு வேறு அணிகளுக்கு மாறிப்போய்விட சவுரப் நண்டல் ஒருவர் மட்டுமே இப்போது சீனியராய் அணியில் இருக்கிறார். அவருக்கு பக்கபலமாய் அனுபவம் வாய்ந்த டிபென்டர்கள் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய மைனஸ். நிதின் ராவல் நல்ல பிளேயர்தான். ஆனால் கடந்த சீசன் முழுக்க காயம் காரணமாக அவர் ஆடவே இல்லை. அவரின் ஃபார்ம் எப்படியிருக்கிறது என்பதை தொடர் தொடங்கவும்தான் தெரிந்துகொள்ள முடியும்.

கவனிக்கப்படவேண்டிய பிளேயர் :

அணியில் இளம் வீரர்கள் ஏராளமிருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களின் கண்கள் ஹரியானா வீரரான சுஷில் மீதுதான். ஜுனியர் கபடி சாம்பியன்ஷிப்பில் நான்கு போட்டிகளில் 27 புள்ளிகள் எடுத்து அணி கோப்பை வெல்லக் காரணமாய் இருந்தவர். பி.கே.எல்லின் போன சீசனில் முதன்மை ரெய்டரான பரத் எதிர்பார்த்தபடி விளையாடாமல் போக, அந்த வெற்றிடத்தை சரியாய் நிரப்பினார் சுஷில். 16 போட்டிகளில் 100 புள்ளிகள். இந்தமுறை ஜெய் பகவானும் டீமில் இருப்பதால் எத்தனை போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுத்தலான கேள்விதான். ஆனால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில் நிச்சயம் ஒளிர்வார்.

ப்ளேயிங் செவன் :

முன் சொன்னதுபோல ஏராளமான ரெய்டர்கள் இருந்தாலும் பர்தீப், பவார் இருவரும் களமிறங்கப்போவது உறுதி. குழப்பம் மூன்றாவது ரெய்டராக யாருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுக்கப்போகிறது என்பதுதான்.

பர்தீப் நர்வால் (முதன்மை ரெய்டர்), அஜிங்யா பவார் (ரெய்டர்), ஜெய் பகவான்/ சுஷில் (தேவைக்கேற்ப இந்த ரெய்டர்களில் ஒருவர் களமிறங்கலாம்), பர்தீக் (லெப்ட் கவர்), பொன்பார்த்திபன் சுப்ரமணியன் (ரைட் கவர்), நிதின் ராவல் (லெப்ட் கார்னர்), சவுரப் நண்டல் (கேப்டன் - ரைட் கார்னர்)

ரெய்டிங் ஏரியாவில் பாகுபலி சிலை போலவும் டிபென்ஸ் ஏரியாவில் பல்வாள்தேவன் சிலை போலவும் காட்சியளித்தாலும் நிதின் ராவல் என்கிற ஒரு ஆல்ரவுண்டரின் வழியே இந்த சமநிலையை எட்டிவிடலாம் என மனக்கணக்கு போட்டு இறங்குகிறது பெங்களூரு புல்ஸ் அணி. கணக்கு பலிக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.