Bengal Warriors web
கபடி

2024 புரோ கபடி லீக் | பெங்கால் வாரியர்ஸ் அணியின் பிரிவியூ! பலம், பலவீனம் என்ன?

2024 புரோ கபடி லீக்கானது அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

Nithish

'ஒரு காலத்துல எப்படியிருந்த பங்காளி நீ' என தூக்குதுரையிடம் கேட்கும் ரோபோ சங்கர் ரியாக்‌ஷன் தான் இப்போதெல்லாம் பெங்கால் வாரியர்ஸ் ரசிகர்களிடம். 5,6,7 சீசன்களில் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி. அதிலும் ஏழாவது சீசனில் சாம்பியனும் கூட. ஆனால் அதன்பின் காட்டு யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான். எவ்வளவு முக்கி முனங்கியும் ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பேனா என்கிறது. இந்தமுறை தவறவிடக்கூடாது என ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்துவிட்டே, ஏல டேபிளுக்கு வந்தது அணி நிர்வாகம்.

கேப்டன் மணிந்தர் சிங்கை எப்போதும் ஏலத்தில் விட்டு எடுப்பார்கள் என்பதால் அவரை ரிலீஸ் செய்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் போன சீசனில் ரெய்டர்களுக்கு நண்டுபிடி போட்டு லபக்கிய டிபென்டர் ஷுபம் ஷிண்டேவை ஏன் ரிலீஸ் செய்தார்கள் என்பதுதான் பலரையும் உறுத்திய கேள்வி. ஆர்.டி.எம்மில் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் அதிலும் அவர்களின் முதல் சாய்ஸ் மணிந்தர் தான். அவருக்கே பர்ஸில் பாதியை கொடுக்க வேண்டியிருக்கும். அதன்பின் ஷிண்டேவை தக்க வைப்பது சிரமம். எப்படி இந்தக் கணக்கை கோட்டைவிட்டார்கள் எனத் தெரியவில்லை.

ஆனால் அதை சரிக்கட்டும்வகையில் ஒரு முரட்டு டீலை ஓகே செய்தார்கள். பி.கே.எல் லீக்கின் ஆல் டைம் லீடிங் டிபென்டரான ஃபஸல் அட்ரசலியை 50 லட்சம் என்கிற மிகக்குறைவான தொகைக்கு தூக்கிப்போனார்கள். அதோடு நிற்கவில்லை. இளம் வீரர்களுக்கான 'டி' பிரிவிலிருந்து அர்ஜுன் ரதீ என்கிற ரெய்டரை 41 லட்சம் கொடுத்து எடுத்து புருவம் உயர்த்த வைத்தார்கள். இப்படி கத்தி என்கிற கதிரேசன் போல ப்ளூபிரின்ட் எல்லாம் போட்டு இவர்கள் ஏலத்தில் எடுத்த அணி நினைத்ததை முடிக்குமா?

பலம் :

மற்ற அணிகளெல்லாம் இளம் வீரர்களை வைத்து எதிர்காலத் திட்டங்களை போட்டுக்கொண்டிருக்க சி.எஸ்.கே போல அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது பெங்கால் வாரியர்ஸ் அணி நிர்வாகம். பி.கே.எல்லின் முதல் சீசனிலிருந்து ஆடிக்கொண்டிருக்கிறார் மணிந்தர் சிங். லீக்கில் அதிக புள்ளிகள் எடுத்த வீரர்களில் இரண்டாமிடம் இவருக்கே. சீசனுக்கு குறைந்தது 190 ரெய்டிங் புள்ளிகளாவது எடுப்பது இவரின் ஸ்பெஷல். எதிரணி டிபென்டர்களை முட்டித்தூக்கித்தான் முன்னேறுவார் என்பதால் 'Mighty Mani' என்பதுதான் இவரின் செல்லப்பெயரே.

மணி முதல் சீசனிலிருந்து என்றால் ஃபஸல் இரண்டாவது சீசனிலிருந்து. பி.கே.எல் வரலாற்றில் அதிக டிபென்ஸ் புள்ளிகளைக் கொண்டிருக்கும் இரானிய லெஜெண்ட். அடுத்தடுத்த தலைமுறைகளை களத்தில் வார்த்தெடுக்கும் அசல் குரு. மும்மூர்த்திகளில் மூன்றாமவர் நிதேஷ். இந்தியா உருவாக்கிய ரைட் கார்னர் டிபென்டர்களுள் மிக முக்கியமானவர். இவர் பங்கிற்கு பி.கே.எல்லில் ஆறு சீசன்கள் ஆடியிருக்கிறார். இந்த ஆசான்களை நம்பித்தான் ஒரு பெரும்படையே பின்னால் அணிதிரண்டிருக்கிறது.

பலவீனம் :

காலங்காலமாக பெங்கால் அணிக்கு மணிந்தர் தான் கேப்டன். அதேபோல ஃபஸல் எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணியை அவர்தான் வழிநடத்துவார். எனவே இந்தமுறை பெங்கால் அணிக்கு யார் கேப்டன் என்கிற கேள்வி எல்லாருக்குமே இருந்தது. இப்போது ஃபஸல்தான் கேப்டன் என அறிவித்திருக்கிறது நிர்வாகம். இது மணிந்தரின் பணிச்சுமையைக் குறைக்குமா மாறாக அவரின் ஈகோவை அதிகப்படுத்துமா என்பது போகப் போகத்தான் தெரியும். கபடியில் முடிவெடுக்க உங்களுக்கு இருக்கும் அவகாசமே ஒருசில நொடிகள்தான். அது தவறாய் போகும்பட்சத்தில் அணியிலிருக்கும் இன்னொரு சீனியர் களத்திலேயே உங்களை கடிந்துகொள்ளுமளவிற்கு ஆக்ரோஷமான ஆட்டம் இது. கடந்த காலத்தில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இப்படியான சீனியர்களின் ஈகோவில் சூடுபட்டுத்தான் இளம் வீரர்களை மட்டுமே பயிற்றுவிக்கத் தொடங்கின. பெங்கால் வாரியர்ஸின் நிலை என்னவோ.

லெப்ட் கார்னரில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் ஸ்ரேயாஸ் உம்பர்தந்த்தை களமிறக்குவதுதான். பேக்கப் ஆப்ஷன்கள் கூட பெரிதாக இல்லை என்கிற நிலைமை. அதேபோல என்னதான் நிதேஷ் சீனியராக இருந்தாலும் கடந்த இரண்டு சீசன்களாக அவரால் தட்டுத்தடுமாறித்தான் டிபென்ஸ் பாயின்ட்கள் எடுக்க முடிகிறது. இந்த முறையும் அது தொடர்ந்தால் எக்கச்சக்க பலு ஃபஸலின் தோளில்.

கவனிக்கப்படவேண்டிய வீரர் :

நிதின்குமார். கபடிக்குப் பேர் போன ஹரியானா வீரர். யுவா கபடித் தொடரின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர். அந்தத் தொடரில் 500 புள்ளிகள் எடுத்த முதல் வீரர். அதே மைலேஜில் பி.கே.எல் பக்கம் வந்தவர். கடந்த சீசனில் கேப்டன் மணிந்தரையே அசரடித்தார். 20 போட்டிகளில் 169 புள்ளிகள். இவரைவிட அதிக புள்ளிகள் எடுத்தவர்கள் எல்லாம் குறைந்தது இரண்டு சீசன்களாவது ஆடிய சீனியர்கள்தான். மணிந்தர் அதிகபட்சம் இன்னும் இரண்டு சீசன்களே ஆடுவார் என்பதால் அவரின் அரியாசனத்தில் நிதின் அமர்வார் என எதிர்பார்க்கிறது அணி நிர்வாகம். அதற்கு இந்த சீசன் முதல்படி.

யுவா கபடித் தொடரின் மற்றுமொரு தரமான தயாரிப்பு அர்ஜுன் ரதீ. இப்போது அந்தத் தொடரில் ரெய்ட் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அர்ஜுன் தான். அதனால்தான் இவருக்கு பி.கே.எல் ஏலத்திலும் ஏகப்பட்ட கிராக்கி. மணிந்தர், நிதினோடு இவர்தான் மூன்றாவது ரெய்டராக களமிறங்குவார்.

ப்ளேயிங் செவன் :

மணிந்தர் (ரெய்டர்), நிதின் குமார் (ரெய்டர்), அர்ஜுன் ரதீ (ரெய்டர்), ஸ்ரேயாஸ் உபர்தந்த் (லெப்ட் கவர்), வைபவ் கார்ஜே (ரைட் கவர்), ஃபஸல் அட்ரசலி (கேப்டன் லெப்ட் கார்னர்), நிதேஷ் (ரைட் கார்னர்)

'எல்லாக் கோட்டையும் அழிங்க. முதல்ல இருந்து ஆடுவோம்' என்கிற ரீதியில் கோச் பாஸ்கரனிலிருந்து டிபென்டர் ஷுபம் ஷிண்டே வரை ஏகப்பட்ட பேரை வண்டி ஏற்றி அனுப்பிவிட்டு கொஞ்சம் பழகிய முகங்கள், ஏனைய புதுமுகங்கள் என உற்சாகமாய் களமிறங்குகிறது பெங்கால் வாரியர்ஸ். கடந்த மூன்று சீசன்களாக பதுங்கியே ஓட்டிவிட்ட வங்காளப்புலி இந்தமுறையாவது இரையை குறிவைத்தால் சரி.