2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தடகள பிரிவில் இந்தியா சார்பில் முதல் வீரராக கே.டி.இர்பான் தகுதிப் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் விளையாடி, நாட்டிற்காக பதக்கம் வெல்வதே விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கனவாக இருக்கும். அதற்காக விளையாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்காக அதிகளவில் பயிற்சி மேற்கொள்வார்கள். இம்முறை ஒலிம்பிக் போட்டி 2020ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியின் தடகள பிரிவில் பங்குபெற இந்தியாவின் கே.டி.இர்பான் தகுதி பெற்றுள்ளார். கே.டி.இர்பான் 20கிலோமீட்டர் நடை போட்டியில் இந்தியாவின் தேசிய ரெகார்டை வைத்துள்ளார். இவர் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய நடை பந்தைய போட்டியில் கலந்துகொண்டார். அதில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் 57 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து நான்காம் இடம்பிடித்தார். இதன் மூலம் 20 கிலோமீட்டர் நடை போட்டிக்கான ஒலிம்பிக் தகுதி நேரமான 1 மணிநேரம் 21 நிமிடங்களுக்குள் வந்து தகுதிபெற்றுள்ளார்.
இதனால் 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெறும் முதல் வீரரானார் கே.டி.இர்பான். கே.டி.இர்பான் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2012ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 20 கிலோமீட்டர் நடை போட்டியில் தகுதி பெற்றிருந்தார். அதில் அவர் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் 21 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 10 இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.