தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மாரிஸ்வரன் ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர்கள் சக்திவேல், சங்கரி தம்பதியின் மகன் மாரிஸ்வரன். ஹாக்கி வீரரான இவர், பள்ளி காலம் முதல் ஹாக்கியில் அசத்தி வருகிறார். தற்போது கோவில்பட்டி அரசு கல்லூரியில் பயின்றுவரும் மாரிஸ்வரன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவர் விடுதி அணிக்காக விளையாடி வந்தார்.
மத்திய அரசின் ஹீலோ திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் மாரிஸ்வரன் சிறப்பாக விளையாடிய காரணத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 18ம் தேதி வரை பெங்களூரில் நடைபெற்ற இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வீரர் மாரிஸ்வரன் என்பது குறிப்பிடதக்கது. இதையடுத்து ஹாக்கி வீரர் மாரிஸ்வரனுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தேவையான உதவிகளை செய்தனர்.
அந்த பயிற்சி முகாமிலும் மாரிஸ்வரன் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் இந்த ஆண்டு இறுதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவுள்ள ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான பயிற்சி முகாம் நாளை பெங்களூருவில் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாரிஸ்வரன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று ஹாக்கி பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.