பெங்களுர் அணியின் பயிற்சியின்போது இளைஞர் ஒருவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பும்ராவை போல் பந்துவீசி அசத்தினார்.
ஐபில் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதவுள்ளனர். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களுர் அணியின் வலைப் பயிற்சியின் போது இந்திய வீரர் பும்ராவை போல் இளைஞர் ஒருவர் பந்துவீசி அசத்தியுள்ளார். இன்று பெங்களுர் அணி மும்பை அணியுடன் மோதவுள்ளதால் பும்ராவின் பந்துவீச்சை அந்த அணி வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் பும்ராவை போல் பந்துவீசும் இளைஞர் ஒருவரை அழைத்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தது பெங்களுர் அணி.
22 வயது மதிக்கதக்க மகேஷ் குமார் அச்சு அசல் பும்ராவை போல் ஓடிவந்து அதே பாணியில் பந்துவீசுவார். ஆகவே இவர் பெங்களுர் அணியின் வலைப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதில் அவர் பும்ராவை போல் யார்க்ர் பந்துவீச அதனை எதிர்கொள்ள பெங்களுர் அணி வீரர்கள் பயிற்சி எடுத்துகொண்டனர். இவருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் ‘ஜூனியர் பும்ரா’ என்று பட்டப்பெயர் சூட்டியுள்ளனர்.
பயிற்சிக்குப் பிறகு மகேஷ் குமாருக்கு பெங்களுர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ள காலணியை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்து மகேஷ் குமார் கூறுகையில், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக நான் கடுமையாக உழைத்தேன். இந்தப் பயிற்சியில் இடம் பெற்றதன் மூலம் எனக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.