பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடரின் 2 வது ஒரு நாள் போட்டி, சவுதாம்டனில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர், 50 பந்துகளில் அபார சதமடித்தார். இது அவருக்கு 8-வது சதம். அவர் மொத்தம், 55 பந்து களில் 6 பவுண்டரி, 9 சிக்சருடன் 110 ரன் சேர்த்தார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் 87 ரன்னும் பேர்ஸ்டோவ் 51 ரன்னும், ஜோ ரூட் 40 ரன்னும் கேப்டன் இயான் மோர்கன் 48 பந்துகளில் 71 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, யாசிர் ஷா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி, பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 35 ரன் எடுத்த நிலையில், மொயின் அலி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பஹர் ஜமான் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினார். அவர் 138 ரன் விளாசி, வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபர் ஆஸம், ஆசிப் அலி தலா 51 ரன் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் அந்த அணியால் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 361 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 12 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, 41 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லே, பிளங்கட் தலா 2 விக்கெட்டுகளும் வோக்ஸ், மொயின் அலி, ரஷித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.