விளையாட்டு

இந்திய பந்துவீச்சை விளாசி தள்ளிய ஜோ ரூட் - சென்னை டெஸ்டில் அசத்தல் சதம்!

jagadeesh

இந்தியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் சதமடித்தார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லே களமிறங்கினர்.இந்திய வேகப்பந்துவீச்சை திறம்பட விளையாடி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தனர்.

இந்த பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தும் விளையாடி வந்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ரோரி பர்ன்ஸ். இதனையடுத்து லாரண்ஸ் களமிறங்கினார். அப்போது பும்ரா பந்துவீச 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினார். இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாண்ட ரூட் மற்றும் சிப்லே ஜோடி மரண மாஸ் காட்டினர். அதிலும் ஜோ ரூட் 164 பந்துகளை சந்தித்து 100 ரன்களை அடித்து அசத்தினார். இந்த டெஸ்ட் போட்டி ஜோ ரூட்டின் 100 ஆவது டெஸ்ட். இந்தப் போட்டியில் 100 ஆவது சதத்தையும் சிறப்பாக பதிவு செய்தார். மறுமுனையில் டோம் சிப்லே நிதானமாகவும் கிளாஸாகவும் விளையாடி வருகிறார் அவர் 254 பந்துகளை சந்தித்து 83 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.