விளையாட்டு

ஹிட் விக்கெட்டில் ஆட்டமிழந்தும் சதமடித்த ஜிதேஷ் சர்மா! வைரலாகும் வீடியோவின் பின்னணி!

ஹிட் விக்கெட்டில் ஆட்டமிழந்தும் சதமடித்த ஜிதேஷ் சர்மா! வைரலாகும் வீடியோவின் பின்னணி!

webteam

ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தும் சதம் அடித்த ஜிதேஷ் சர்மாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் சமநிலை வகிக்கின்றன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில், முதல் போட்டியின்போது காயம் ஏற்பட்ட சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக விதர்பா அணி வீரர் ஜிதேஷ் சர்மா சேர்க்கப்பட்டார்.

ஆனால், அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. என்றாலும், அவரைப்பற்றிய பேச்சுகள்தான் வைரலாகி வருகின்றன. அதிலும் அவர் போட்டி ஒன்றில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தும், சதம் அடித்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

அவர் 2014ஆம் ஆண்டு விதர்பா அணிக்காக அறிமுகமானார். அவர் களமிறங்கிய முதல் சீசனிலேயே நடுவர்களையும் எதிரணி வீரர்களையும் ஏமாற்றி விளையாண்டதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கான வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அவர் களமிறங்கிய முதல் சீசன் போட்டி ஒன்றில், இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பந்து வீச, அதில் ஜிதேஷ் ஹிட்-விக்கெட்டில் (பேட்டர் பந்தை எதிர்கொள்ளும்போது தனக்கே தெரியாமல் ஸ்டெம்பை டச் செய்தால் அது ஹிட் விக்கெட் ஆகும்) ஆட்டமிழந்துள்ளார்.

இதை, விதர்பா அணித் தலைவர் ஃபைஸ் ஃபசலைத் தவிர, யாரும் கவனிக்கவில்லை, இதனால், அந்தப் போட்டியில் ஜித்தேஷ் தொடர்ந்து பேட்டிங் செய்ததுடன், அப்போட்டியில் சதமும் அடித்து அசத்தியுள்ளார். நடுவர்களையும், எதிரணி வீரர்களையும் இப்படி ஏமாற்றி ஜிதேஷ் விளையாண்ட இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தாம் அவுட் என்று தெரிந்தால், நடுவர் சொல்வதற்கு முன்பே களத்தில் இருந்து பெவிலியனுக்கு திரும்பிவிடுவார். இதற்கு உதாரணமாய் எத்தனையோ போட்டிகளைச் சொல்லலாம்.

தற்போது இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜிதேஷ் சர்மா, ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.  கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவ்வணிக்காக 10 இன்னிங்ஸில் 234 ரன்கள் எடுத்திருந்தார். அதுபோல் சமீபத்தில் முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தொடரிலும் விதர்பா அணிக்காக ஆடி அதிக ரன்கள் எடுத்தார். அதுமட்டுமின்றி, விக்கெட் கீப்பரிலும் அவர் அசத்திவருகிறார். இந்த நிலையில்தான் பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பரில் ஜொலிக்கும் ஜிதேஷ் சர்மாவை இந்திய அணி தற்போது தேர்வு செய்துள்ளது.

- ஜெ.பிரகாஷ்