இங்கிலாந்து வீரர் ஜோஸன் ராய் சதம் அடித்த மகிழ்ச்சியில் நடுவர் மீது மோதியது மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ராய் 153 ரன்கள் விளாசினார். பட்லர் 64, பேரிஸ்டோவ் 51 ரன்கள் எடுத்தனர்.
இந்தப் போட்டியில், 92 பந்துகளில் ராய் சதம் அடித்து இருந்தார். 27வது ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்த போது, முஸ்டபிஸுர் ரஹ்மான் வீசிய பந்தை ராய் அடித்து விட்டு ஓடினார். பீல்டரையே பார்த்துக் கொண்டு ஓடினார். பீல்டர் பந்தை தவறவிட்டதால் அது பவுண்டரி ஆனது. உற்சாகத்தில் துள்ளி குதிக்க முயன்றார் ராய்.
ஆனால், எதிரே நடுவர் இருப்பதை பார்க்கவில்லை. நடுவரும் அவர் வருவதை பார்த்து ஒதுங்கினார். அப்பொழுதும் ராய், நடுவர் மீது மோதிவிட்டார். நடுவரும் ராய் மோதிய வேகத்தில் கீழே சரிந்து விழுந்தார். உடனே ராய் அவரை தூக்கிவிட்டார்.
முதலில் இங்கிலாந்து ரசிகர்கள் வீரர்கள் அனைவரும் ராய் சதம் அடித்த மகிழ்ச்சியில் கைதட்டினர். ஆனால், நடுவர் கீழே விழுந்ததை பார்த்து சிரித்துவிட்டனர். மைதானம் முழுவதும் சிரிப்பொலி சத்தம் கேட்டது. ரசிகர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் நீண்ட நேரம் சிரித்தனர்.
ராய் நடுவர் மீது மோதும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.