விளையாட்டு

ஜெர்மனியை பதம்பார்த்த ஜப்பான்!- 7 கோல்கள் அடித்து அசத்திய ஸ்பெயின்!

ஜெர்மனியை பதம்பார்த்த ஜப்பான்!- 7 கோல்கள் அடித்து அசத்திய ஸ்பெயின்!

Rishan Vengai

கால்பந்து உலகக்கோப்பையில் ஜப்பானை எதிர்கொண்ட ஜெர்மனி சுலபமாக வெல்லும் என்ற நிலையில், கடைசி நேரத்தில் 2 கோல்களை அடுத்து அதிர்ச்சி கொடுத்து வென்றது ஜப்பான்.

பிரான்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் காயம், அர்ஜெண்டினா தோல்வி, மான்செஸ்டரிலிருந்து ரொனால்டோ விலகல், பெரிய அணிகளை பதம்பார்க்கும் சிறிய அணிகள் என தொடங்கும் போதே கலைகட்டியுள்ளது இந்த வருட ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வாய்பொத்தியபடி ஜெர்மனி!

உலகக் கோப்பையின் போது ‘OneLove’ ஆர்ம்பேண்டை அணிந்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என FIFA நிர்வாகம் கட்டுப்பாடை விதித்தை அடுத்து, ஜெர்மனி வீரர்கள் தங்கள் உரிமையை வெளிகாட்டும் பொருட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, வாயைப்பொத்தியபடி புகைப்படம் எடுத்து ஃபிஃபாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜெர்மனிக்கு ஷாக் கொடுத்த ஜப்பான்!

நேற்று நடந்த நான்கு போட்டியில், முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட ஜெர்மனி அணிக்குண்டான போட்டியில், ஜெர்மனியை ஜப்பான் அணி எதிர்கொண்டு பலப்பரீட்சை நடத்தியது. 6.30 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த போட்டியில், ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரரான குண்டோகன் 33ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷாட்டைப் பயன்படுத்தி கோல் அடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

பின்னர் முதல்பாதி வரையிலும் எந்த அணியும் கோல் போடாமல் ஜெர்மனி 1-0 என முன்னிலையிலேயே இரண்டாவது பாதியை தொடங்கியது. தொடர்ந்து போட்டி 75 நிமிடங்கள் வரை சென்ற நிலையில், ஜெர்மனி அணி 1-0 என வெற்றிபெற்றுவிடும் என்று எல்லோராலும் நினைக்கப்பட்டது. ஆனால் இன்னும் தாங்கள் போட்டிக்குள் இருக்கிறோம் என்று நிரூபித்த ஜப்பான் அணியின் ரிட்சு டோன், போட்டியின் 75ஆவது நிமிடத்தில் கோல் அடித்து கோல் கணக்கை சமன்செய்து மைதானத்தில் இருந்த ஜப்பான் ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து அடுத்த கோலை அடிக்க பல முயற்சிகளை எடுத்த ஜெர்மனி அணியின் அனைத்து முயற்சிகளும் வீணானது. பின்னர் கடைசி 83ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டகுமா ஆசானோ யாரும் எதிர்பாராத வகையில் விரட்டிய பந்தை எளிதாக கோலாக மாற்றி ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சியளித்தார். போட்டியின் இறுதி நேரத்தில் ஒன்றும் செய்யமுடியாத ஜெர்மனி 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

குண்டோகன் வேதனை!

கடைசி நேரத்தில் தோல்வியை சந்தித்து நிலைகுலைந்தது ஜெர்மனி அணி. இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து வேதனை தெரிவித்த நட்சத்திர வீரர் குண்டோகன், “ எளிதாக ஜப்பான் அணிக்கு வெற்றியை விட்டுகொடுத்து விட்டோம், இரண்டாவது கோலை நிகழாமல் தடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

நேற்று நடந்த மற்ற போட்டிகளில் 3.30 மணிக்கு நடைபெற்ற மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையேயான போட்டி கோல்கள் அடிக்கப்படாமல் சமனில் முடிந்தது. 9 மணிக்கு நடைபெற்ற ஸ்பெயின் - கோஸ்டாரிகா இடையேயான போட்டியில் 7 கோல்கள் அடித்து டாமினேட் செய்த ஸ்பெயின் அணி எளிதாக வெற்றிபெற்றது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் கனடா அணியை பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.