விளையாட்டு

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி!

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி!

webteam

உலக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 13-வது லீக் ஆட்டம் டான்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. இதற்கிடையே 2 முறை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா ஷஸாய் 34 ரன்னும் நூர் அலி ஸ்ட்ரன் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த ஹஸ்மத்துல்லா ஷாகிதி 99 பந்துகளை சந்தித்து 59 ரன் எடுத்தார். வேறு யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அதோடு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசியதால், ஆப்கான் வீரர்கள் விக்கெட்டுகளை மடமடவென இழந்தனர். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 41.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்களை எடுத்தது. 

நியூசிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகளையும், பெர்குசன் 4 விக்கெட்டுகளையும், கிரான்ட்ஹோம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 32.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் குப்தில், சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து முன்ரோ 22 (24) ரன்னிலும் ராஸ் டெய்லர் 48 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன், சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 79 (99) ரன்களும், டாம் லாதம் 13(18) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அப்தாப் ஆலம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இது அந்த அணிக்கு ஹாட்ரிக் வெற்றி.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் ஆடியபோது, 34 வது ஓவரில் பெர்குசன் வீசிய பந்து, ரஷித்கானின் ஹெல்மெட்டை தாக்கி, விக்கெட்டை வீழ்த்தியது. இதில் ரஷித்கான் அதிர்ச்சியானார். அவரிடம் நியூசிலாந்து கேப்டன், ‘’எதும் காயம் ஏற்பட்டிருக்கிறதா?’’ என்று விசாரித்தார். ‘’இல்லை’’ என்றார் ரஷித். ஆனால் நியூசிலாந்து பேட்டிங் செய்யும் போது அவர் பந்துவீச வரவில்லை. அவருக்கு ஓய்வு தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.