சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா சென்னை குறித்து தமிழில் போட்ட இரண்டு வார்த்தை ட்வீட்டால் குஷியான சென்னை ரசிகர்கள், பதில் ட்வீட் போட்டு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆசியகோப்பையில் ஹாங்ஹாங் அணிக்கு இடையேயான போட்டியில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஜடேஜா டி20 உலகக்கோப்பை முதற்கொண்டு, அதற்கு பிறகு நடந்த அனைத்து போட்டிகளையும் இழக்க நேரிட்டது. டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டை கூட இந்திய அணியால் வீழ்த்த முடியாத போது நிச்சயம் இந்திய அணி ஜடேஜாவின் இருப்பை தவறவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர்களையும் தவறவிட்டார்.
மேலும் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர் சிகிச்சையில் இருந்துவந்தார், ஜடேஜா. சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீரான நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால் முக்கியமான தொடராக பார்க்கப்படும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக, ஜடெஜா முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, அவர் தன் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வைக்கப்படுள்ளது.
இந்நிலையில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக, சென்னை பயணித்துள்ளார் இந்திய வீரர் ஜடேஜா. நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் சவுராஸ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கிடையேயான ரஞ்சிக்கோப்பை போட்டியில் சவுராஸ்டிரா அணியில் பங்குபெற்று விளையாடுகிறார் ஜடேஜா. ரஞ்சிக்கோப்பையில் கடைசில் லீக் சுற்று போட்டியில் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன.
ரஞ்சிக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு சென்னை வந்திருக்கும் ஜடேஜா, தனது டிவிட்டர் பக்கத்தில் “ வணக்கம் சென்னை” என தமிழில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அதை பகிர்ந்துவரும் சென்னை ரசிகர்கள், ” எங்களுடைய ஃபேவரட் ஜடேஜாவை சென்னை வரவேற்கிறது, வணக்கம் என்னுடைய ரோல் மாடல், சிங்கள் களம் இறங்கிவிட்டது, மீண்டும் வரவேற்கிறோம் சூப்பர் கிங், உங்களுடைய அபாரமான ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறோம்” என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ரீ-ட்வீட் செய்து தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
ஜடேஜா முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என்று பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.
2016-2017ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி இருந்த ரவிந்திர ஜடேஜா, 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். மற்றும் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.