விளையாட்டு

55 பந்தில் 147 ரன்: மிரட்டிய ஸ்ரேயாஸ் அபார சாதனை!

55 பந்தில் 147 ரன்: மிரட்டிய ஸ்ரேயாஸ் அபார சாதனை!

webteam

முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடரில், சிக்கிம் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், அபார சதம் அடித்தார்.

ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையே, சையத் முஷ்டாக் அலி கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கியுள்ள இந்த தொடர் மார்ச் 2 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்திய அணியில் இடம் பிடித்துள்ள முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர். நேற்று தொடங்கிய இந்தப் போட்டி, பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்தூரில் நடந்த ஒரு போட்டியில் உனட்கட் தலைமையிலான சவுராஷ்ட்ரா அணியும் அனிருத் சிங் தலைமையிலான ரயில்வேஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த சவுராஷ்ட்ரா அணியில், இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வீரர் புஜாரா அபாரமாக ஆடி, 61 பந்தில் 100 ரன் விளாசினார். இருந்தும் அந்த அணி தோற்றது.

இந்தூரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரஹானே, முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்து மிரட்டியது. உள்ளூர் டி20 போட்டி யில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகப்பட்ச ஸ்கோர் இது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஏழாவது அதிகப்பட்ச ஸ்கோர்!.

ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்துகளில் 15 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 147 ரன் விளாசினார். இதன் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஒட் டு மொத்த டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன் விளாசிய இந்திய வீரர் என்ற சிறப்பை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார். இதற்கு முன் ரிஷாப் பன்ட் ஐ.பி. எல்.போட்டியில் கடந்த ஆண்டு 128 ரன்கள் (சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக) எடுத்ததே இந்தியர் ஒருவரின் அதிகப்பட்சமாக இருந்தது.

(ரிஷாப் பன்ட்)

அத்துடன் டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்தியர் என்ற சாதனையையும் ஐயர் பெற்றார். அவர் 15 சிக்சர் விளாசினார். இதற்கு முன் முரளி விஜய் அடித்த 11 சிக்சர்கள்தான் அதிக சிக்சர்களுக்கான சாதனையாக இருந்து வந்தது. 

தொடர்ந்து ஆடிய சிக்கிம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.