செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் பந்துவீச்சை பந்தாடினார் சென்னை சூப்பர் கிங்ஸின் அம்பத்தி ராயுடு.
48 பந்துகளில் 71 ரன்களை குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு உதவினார் ராயுடு.
இந்நிலையில் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ராயுடுவை எடுக்காமல் விட்டுவிட்டீர்களே என ஆதங்கப்பட்டுள்ளனர் சக சென்னை அணி வீரர்களான ஹர்பஜனும், வாட்சனும்.
“உலகக்கோப்பை அணித் தேர்வில் ராயுவுடுவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். அவர் அந்த அணியில் இடம் பிடித்திருக்க வேண்டியவர். இருப்பினும் மும்பையுடனான ஆட்டத்தில் அதை மீண்டும் நிரூபித்துள்ளார். வயது ஒரு பக்கம் இருந்தாலும் அவரது திறமையை பாருங்கள்” என சொல்லியுள்ளார் ஹர்பஜன் சிங்.
“ராயுடுவை 2019 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்காமல் போனது இந்திய அணிக்கு தான் இழப்பு. உலகின் தலைசிறந்த டி20 பவுலரான பும்ராவை மும்பையுடனான ஆட்டத்தில் கூலாக எதிர்கொண்டு அவர் விளையாடியது மாஸ்” என தெரிவித்துள்ளார் வாட்சன்.
உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியதற்கு முக்கிய காரணமாக நிலைத்து ஆடக்கூடிய நான்காவது கள வீரர் இல்லாததே காரணம் என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இந்திய அணி நான்காவது வீரரை தேர்வு செய்வதில் கடந்த சில வருடங்களாகவே திணறி வருகிறது. அதற்காக பல முயற்சிகளையும் செய்து பார்த்தது. விஜய் சங்கர் உள்ளிட்ட பல வீரர்கள் அந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், அனுபவமில்லாத விஜய் சங்கர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளித்துவிட்டு அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது இந்திய அணிக்கு உண்மையில் இழப்பு தான்.