விளையாட்டு

‘பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு என்னை வெளியனுப்புவதில் மகிழ்ச்சி’-சாய்னா வருத்தம்

‘பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு என்னை வெளியனுப்புவதில் மகிழ்ச்சி’-சாய்னா வருத்தம்

சங்கீதா

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பங்கேற்க இயலாத நிலை உருவாகியுள்ளது.

இந்தத்தொடர்களுக்கு இந்திய வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. ஆனால், தொடர்ச்சியாக பேட்மிண்டன் தொடர்களில் பங்கேற்றதாகவும், இதன் காரணமாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க இயலாது எனவும், தரவரிசையில் 23-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், ஏற்கெனவே கூறியது போன்றே சாய்னா அதனைப் புறக்கணித்தார். இதனால் அவர் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இயலாத சூழல் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தகுதிப் போட்டியை புறக்கணித்ததற்கான காரணத்தை சாய்னா நேவால் வெளியிட்டுள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் எனக்கு பட்டத்தை தக்கவைக்க விருப்பம் இல்லை என்பதுபோல் செய்திகள் வெளியாகி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

ஐரோப்பாவில் 3 வாரங்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடிவிட்டு, தற்போது தான் தாயகம் திரும்பியுள்ளேன். அடுத்த இரு வாரத்திற்குள் ஆசிய சாம்பியன்ஷிப் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட நிலைமையில், ஒரு மூத்த வீராங்கனை அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்பது என்பது இயலாத காரியம்.

இதனால் காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறுகிய கால அவகாசமே இருப்பதால், தகுதி போட்டியில் என்னால் பங்கேற்க இயலாது என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு தகவல் தெரிவித்து இருந்தேன். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் இருந்து என்னை வெளியேற்றுவது அவர்களுக்கு (பேட்மிண்டன் சம்மேளனம்) மகிழ்ச்சி அளிப்பதுபோல் தோன்றுகிறது' என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.