விளையாட்டு

ஆறாவது முறை அவுட்: பெங்களூருக்குத் தொடரும் சோகம்!

ஆறாவது முறை அவுட்: பெங்களூருக்குத் தொடரும் சோகம்!

webteam

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றிலேயே பெங்களூரு அணி வெளியேறுவது ஆறாவது முறையாகும்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப்போட்டியின் முடிவை அடுத்து, பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரஹானே 33 ரன்களும் கிளாசன் 32 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 53 ரன்கள் எடுத்தார். பார்த்திவ் பட்டேல் 33 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியின் ஷ்ரேயாஸ் கோபால் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த தோல்வியால், பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது பெங்களூரு அணி. இப்படி லீக் சுற்றிலேயே வெளியேறுவது பெங்களூரு அணிக்கு இது முதல் முறையல்ல, ஆறாவது முறை! ஏற்கனவே 2008, 2012, 2013, 2014, 2017 ஆகிய வருடங்களிலும் லீக் சுற்றிலேயே வெளியேறி விட்டது பெங்களூரு அணி. 

இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு இந்த முறை அதிக நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், பாதியிலேயே வெளியேற வேண்டியதாகிவிட்டது. அந்த அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்குச் சென்று தோற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.