விளையாட்டு

6 விக்கெட் வீழ்த்தியது எப்படி? குல்தீப் யாதவ் விளக்கம்

webteam

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு வரும் என்று நம்புவதாகச் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி,  நாட்டிங்காமில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 49.5 ஓவர்களில் 268 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 53 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக ஆடி, 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவரது சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

பின்னர் ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்களும் விராத் கோலி 74 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது குல்தீப்புக்கு வழங்கப்பட்டது. 

விருதை பெற்ற பின் குல்தீப் கூறும்போது, ‘எனக்கு இன்று முக்கியமான நாள். முதல் சில ஒவர்களில், சிறப்பாகத் தொடங்கினேன். எனது முதல் இரண்டு ஓவர்களிலேயே அதிர்ஷ்டவசமாக விக்கெட் கிடைத்தது. எனது முதல் ஓவரை வீசும்போது பந்து கொஞ்சம் திரும்புவதை அறிந்தேன். உடனடியாக இது எனக்கான போட்டி என்று தெரிந்து கொண்டேன். சரியான இடத்தில் பந்தை, வெவ்வேறு வகையாக வீசினால் பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாகத் தடுமாறுவார்கள். அதன்படியே செய்தேன். விக்கெட் விழுந்தது. எங்கு விளையாடுகிறோம், மைதானம் சிறியதா, பெரியதா என்பதெல் லாம் எனக்கு பிரச்னையே இல்லை. டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைப்பது பற்றி கேட்கிறார்கள். அழைப்பு வரும் என்று நம்புகிறேன். பார்க்கலாம்’ என்றார்.