விளையாட்டு

கெயிலின் உலக சாதனை ஸ்மாஸ்.. ஒரே இரட்டை சதத்தால் இஷான் கிஷன் முறியடித்த சாதனைகள்!

கெயிலின் உலக சாதனை ஸ்மாஸ்.. ஒரே இரட்டை சதத்தால் இஷான் கிஷன் முறியடித்த சாதனைகள்!

Rishan Vengai

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷான் ஒரே போட்டியிலேயே பல சாதனைகளை படைத்தும் உடைத்தும் உள்ளார்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முன்னதாக தொடங்கப்பட்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி முதல் 2 போட்டிகளையும் வென்று ஏற்கனவே தொடரை வென்று விட்டது. இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்கிய நிலையில், இந்த போட்டியில் ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது. முந்தைய போட்டியில் கையில் அடிபட்ட நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தொடரிலிருந்து விலகிய நிலையில், கேப்டன் பொறுப்பை துணை கேப்டனான கேஎல் ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஓபனிங் செய்யும் வாய்ப்பு இஷான் கிஷானிற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், டாஸை வென்ற வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ஷிகர் தவான் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி ஒருபுறம் வேடிக்கை பார்க்க வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு வானவேடிக்கைகளை காட்டினார் இஷான் கிஷன். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் போட இந்திய அணியின் ஸ்கோர் ஏறுமுகத்திலேயே இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 85 பந்துகளில் சதமடித்து தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

பின்னர் சரவெடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் வங்கதேசத்தின் பந்துவீச்சை கிரவுண்டின் நாலாபுறமும் சிதறடிக்க 24 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் விளாசிய அவர் 126 பந்துகளையே 200 என்ற இமாலய ரன்களை எட்டி, இதற்கு முன் இரட்டை சதங்களை விளாசிய உலக கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளுக்கு செக் வைத்தார். தொடர்ந்து சிக்சர், பவுண்டரி என அதிரடி காட்டிய இஷான் கிஷான் 131 பந்துகளில் 210 ரன்கள் சேர்த்திருந்த போது டஸ்கின் அகமது பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமடித்த இஷான் கிஷன் ஒரே போட்டியிலேயே பல சாதனைகளை படைத்து அசத்தி இருக்கிறார்.

பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சர்வதேச அரங்கில் அவரது 72ஆவது சதத்தை பதிவு செய்து அசத்த, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்தது.

முதல் சதத்தை இரட்டை சதமாய் மாற்றிய ஒரே வீரர்!

9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் இஷான் கிஷன் 3 அரைசதங்களை அடித்திருந்த நிலையில், இன்றைய போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் முதல் சதத்தையே தன்னுடைய அபாரமான பேட்டிங்கால் இரட்டை சதமாக மாற்றிய இஷான் கிஷான், முதல் சதத்தை பதிவு செய்யாமல் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதிவேக இரட்டை சதம்!

85 பந்துகளில் 100 ரன்களை எட்டிய இஷான் கிஷான் 126 பந்துகளிலேயே இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 138 பந்துகளில் இரட்டை சதமடித்து அசத்தி இருந்தார் வெஸ்ட் இண்டிஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல். இந்நிலையில் 138 பந்துகளில் இரட்டை சதம் என்ற முந்தைய கெய்லின் சாதனையை முறியடித்து 126 பந்துகளில் எட்டி புதிய சாதனையை படைத்துள்ளார் இஷான் கிஷான்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேக 50 ரன்கள், அதிவேக 100 ரன்கள், அதிவேக 150 ரன்கள் என தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் டி-வில்லியர்ஸ் அடித்திருக்க, அதிவேக 200 ரன்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார் இஷான் கிஷான். அதிவேகமாக 250 ரன்கள் அடித்த சாதனை ரோகித் சர்மா வசமே உள்ளது.

குறைவான வயதில் இரட்டை சதம்!

24 வயது நிரம்பிய இஷான் கிஷான் இரட்டை சதமடித்து இந்த சாதனையை படைத்திருக்கிறார். 2013ல் இரட்டை சதமடித்த ரோகித் சர்மா 26 வயதில் முன்னர் அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

200 ரன்கள் அடித்த 4ஆவது இந்திய வீரர்!

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தியிருக்க, தற்போது அவர்களுக்கு பிறகு 4ஆவது இந்திய வீரராக இந்த சாதனையை படைத்திருக்கிறார் இஷான் கிஷன்.

உலக அரங்கில் சச்சின், சேவாக், ரோகித், மார்டின் கப்தில், க்றிஸ் கெயில், ஃபகர் ஷமான் என 6 வீரர்களுக்கு பிறகு 7ஆவது வீரராக இந்த இமாலய சாதனையை அடைந்து அசத்தியிருக்கிறார் இஷான்.

500 ரன் குவிக்கும் நிலை இருந்தது.. ஆனால்.. 

இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து களத்தில் இருந்த போது எப்படியும் இந்திய அணி 500 ரன்கள் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்திய 50 ஓவர்கள் முடிவில் 409 ரன்கள் மட்டுமே எடுத்தது. இஷான் கிஷன், விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர் ரன்கள் எடுக்கும் வேகம் குறைந்துவிட்டது. அதன் பிறகு களமிறங்கிய கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என யாரும் அதனை மேற்கொண்டுச் செல்லவில்லை. 15 ஓவர்களை சரியாக பயன்படுத்தி இருந்தால் 450 ரன்களாவது அடித்து இருக்கலாம். கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் 37, அக்ஸர் பட்டேல் 20 ரன்கள் அடித்ததால் 400 ரன்கள் கடக்க முடிந்தது. இல்லையென்றால் 400 ரன்களே தொட்டு இருக்காது. 400 ரன்களை தொட்டிருக்காவிட்டால் மோசமான ஒன்றாக மாறியிருக்கும்.