இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் நாடுகளில் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டுக்குத்தான் ஆதரவு அதிகம். இங்கு, வெறிகொண்ட ரசிகர்களை கொண்ட விளையாட்டாகவும் இருக்கிறது கிரிக்கெட்! இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் என்றால் கேட்கவே வேண்டாம். இந்தியாவில் கிரிக்கெட் மதமாகிவிட்டது என்று கூட சொல்கிறார்கள். இந்தியாவை அடுத்து பாகிஸ்தான், இலங்கையிலும் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் அதிகம்தான்.
ஆசியாவில் பலம் கொண்ட அணிகளாக இருந்த இந்த அணிகளில், இலங்கை அணிக்கு இப்போது நேரம் சரியில்லை போல! கடந்த இரண்டு வருடங்களாக அந்த அணி தொடர்ந்து சறுக்கிக்கொண்டே வருகிறது. அணியின் பயிற்சியாளரை மாற்றியும் மாற்றம் வரவில்லை அங்கு.
2017-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வென்றதற்கு செய்வினை வைத்ததுதான் காரணம் என்று கூறியிருந்தார் இலங்கை பெண் ஒருவர். ’கேப்டன் சண்டிமால் கேட்டுக்கொண்டதால் பில்லி சூனியம் வைத்தேன். அதனால்தான் இலங்கை அணி வெற்றி பெற்றது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
’இப்போது அது உல்டா ஆகியிருக்குமோ என்னமோ, இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக யாராவது சூனியம் வைத்திருப்பார்களோ?’ என்று கிண்டலடிக்கிறார்கள் ரசிகர்கள் சிலர்.
ஆசியக் கண்டத்தில் கத்துக்குட்டி அணியாக இருந்த பங்களாதேஷ், இப்போது பலங்கொண்ட அணியாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் தத்தக்கா பித்தக்கா என்று ஆடி வந்த ஆப்கானிஸ்தான் அணி, சில அதிர்ச்சிகளை அளித்துவருகிறது அவ்வப்போது. ஏற்கனவே அந்த அணி இந்த வருடம் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளை அருமையாக வென்று தன்னை மெருகேற்றிருக்கிறது. அதன் தொடர் அதிர்ச்சிதான் நேற்று நடந்த போட்டி!
ஐந்து முறை ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை அணியை, ஜஸ்ட் லைக் தேட்-ஆக தொடரில் இருந்து வெளியேற்றி இருக்கிறது ஆப்கானிஸ்தான். முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ரஹ்மத் ஷா அதிகப்பட்சமாக 72 ரன்களும் இஹ்ஷானுல்லா 45 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் திசாரா பெரேரா 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி, 41.2 ஒவர்களில் 158 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி, ஆசியாவில் தன்னை கொஞ்சம் பலம் கொண்ட அணியாக உருமாற்றிக்கொண்டிருக்கிறது.
Read Also -> விராத் கோலி இல்லைனா என்னங்க? கேட்கிறார் கங்குலி!
இந்நிலையில் இலங்கை அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் விளாசி வருகின்றனர்.
‘ஐந்து முறை சாம்பியனான இலங்கை அணி, இந்திய அணி முதல் போட்டியை விளையாடுவதற்கு முன்பே ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்டது. சர்வதேச போட்டியில் இது தனித்துவமான சூழல்’ என்று குறிப்பிட்டுள்ளார் கிரிக்கெட் விமர்சகர் மோகன்தாஸ் மேனன்.
‘ஆப்கானிஸ்தான் இலங்கையை வீழ்த்தியதை சோகம் என்று சொல்லலாமா?’ என்று கேட்டிருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
‘இலங்கை அணி வீரர்கள் ஐபிஎல்-லில் விளையாடவில்லை. விளையாடியிருந்தால் ஆப்கானிஸ்தான் அணியின் தனித்துவமான ஸ்பின் அட்டாக்கை எளிதாக சந்தித்திருக்க முடியும்’ என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Read Also -> கண்கலங்க வைத்த புகைப்படம்... குவியும் நிதியுதவி
இந்திய துணைக் கண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் பங்களாதேஷூம் ஆப்கானிஸ்தானும் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு மாற்றாக உருவெடுக்கின்றன’ என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘இலங்கை அணி கடினமான பிரிவிலோ அல்லது ஆப்கானிஸ்தான் அணி எளிதான பிரிவிலோ இடம்பெற்றுள்ளதா என்று தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார் ஒருவர்.
இந்த விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் ஆசிய கிரிக்கெட்டின் வானிலை இப்போது மாறித்தான் இருக்கிறது. ஆப்கானும் பங்களாதேஷூம் பலம் கொண்ட அணிகளாக உருமாறிவிட்டன.