விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து! எங்கே கோட்டை விட்டது பட்லர் டீம்?!

இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து! எங்கே கோட்டை விட்டது பட்லர் டீம்?!

Rishan Vengai

டி20 உலககோப்பையின் சூப்பர் 12 போட்டிகள் அடுத்தடுத்து பாய்ண்ட்ஸ் டேபிள் கணக்கில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு அணி ஒரு போட்டியை வென்று பலம் வாய்ந்ததாக தெரிந்தால், அடுத்தப் போட்டியில் அந்த அணியை வீழ்த்தி மற்றொரு அணி நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்று காட்டுகிறது. சுவாரசியமான போட்டிகளுக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது சூப்பர் 12 பட்டியல்.

இன்று நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இங்கிலாந்துக்கு தண்ணி கட்டிய பால்பிர்னே - டக்கர் கூட்டணி!

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து அணி 21 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும் 2ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பால்பிர்னே மற்றும் டக்கர் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிக்சர்கள், பவுண்டரிகள் என விளாசி தொடர்ந்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எப்படி இந்த கூட்டணியை பிரிப்பது என்று தடுமாறிய இங்கிலாந்து பவுலர்களுக்கு அதிரடியாக விளையாடிய டக்கரை ரன் அவுட் செய்து பெருமூச்சுவிட வைத்தார் இங்கிலாந்து வீரர் அடில் ரசித்.

157 ரன்கள் குவித்த அயர்லாந்து:

அடுத்து வந்த டெக்டர் டக் அவுட் ஆகி வெளியேறினாலும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பால்பிர்னே அரைசதம் அடித்தார். 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விளாசிய பால்பிர்னே 62 ரன்கள் இருந்த நிலையில் லிவிங்க்ஸ்டன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கர்டிஸ் கேம்பர் அதிரடியை வெளிப்படுத்தினாலும், தொடர்ந்து நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டக் அவுட் ஆன பட்லர்!

158 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து எளிதாகவே வென்றுவிடும் என்று நினைத்த இடத்தில், பட்லரை டக் அவுட் செய்து வெளியேற்றி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார் ஜோசுவா லிட்டில், உடன் அலெக்ஸ் ஹேல்ஸும் 7 ரன்களுக்கு வெளியேற 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. அணியின் சரிவை சரிகட்ட அதிரடியை வெளிகாட்டாமல் டேவிட் மாலன் நிதானமான ஆட்டத்தை வெளிக்காட்டினாலும், அடுத்த எண்டில் இருந்த பென் ஸ்டோக்ஸ், ஹார்ரி ப்ரூக் வீரர்கள் என அடுத்தடுத்து வெளியேற 35 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மாலனும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சரிந்த இங்கிலாந்து அணி - குறுக்கிட்ட மழை

86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைமையில் இருந்த இங்கிலாந்து அணியை, 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என அடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி காப்பாற்ற நினைத்த மொயின் அலியை 15ஆவது ஓவரில் குறுக்கிட்டு ஏமாற்றியது மழை.

டக்வொர்த் லெவிஸ் முறை - அயர்லாந்து வெற்றி!

மழை தொடர்ந்து நிற்காத காரணத்தால் டக்வொர்த் லெவிஸ் முறையில் போட்டியின் முடிவை அறிவித்தனர் போட்டியின் நடுவர்கள். இங்கிலாந்து 5 ரன்கள் பின்தங்கியிருந்ததால், 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது மட்டுமில்லாமல், மழை குறுக்கீடு இருக்கக்கூடிய மைதானங்களில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நாளைய சூப்பர் 12 போட்டிகளாக தென்னாப்பிரிக்கா VS வங்கதேசம், இந்தியா VS நெதர்லாந்து, பாகிஸ்தான் VS ஜிம்பாபே என மூன்று போட்டிகள் காலை 8.30 மணி, மதியம் 12.30 மணி, மாலை 4.30 மணிக்கு என நடைபெற இருக்கிறது.