விளையாட்டு

''ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்த மறுஆய்வு'' - இன்று கிளம்பும் ஐபிஎல்-ன் ஜூன் மாத ட்வீட்!!

''ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்த மறுஆய்வு'' - இன்று கிளம்பும் ஐபிஎல்-ன் ஜூன் மாத ட்வீட்!!

webteam

கடந்த ஜூன் மாதம் லடாக் பகுதியில் இந்திய சீன வீரர்களுக்கிடையே மோதல் நடந்தது. இந்த மோதலின் தொடர்ச்சியாக இந்தியா, சீனாவிற்கு சொந்தமான 59 ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதித்தது. இந்தப் பிரச்னை காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கு சீனாவிலிருந்து கிடைக்கும் ஸ்பான்சர்ஷிப்பில் சிக்கல் நிலவுமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது.

அப்போது பதிவிட்ட பலரும், ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் விவோ நிறுவனத்தை பிசிசிஐ நீக்க வேண்டுமென்றும் கருத்துகளை பதிவிட்டனர். அப்போது இது குறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நீடிக்கும். இது ஐந்து வருட ஒப்பந்தம். அது முடியும் வரை இது தொடரும். சீன நிறுவனங்களுக்கு உதவுவது என்பது வேறு, சீன நிறுவனங்களிடம் இருந்து நாம் பயன்பெறுவது என்பது வேறு. அந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சீன நிறுவனங்கள் இந்திய நுகர்வோர்களிடம் தங்களது தயாரிப்புகளை விற்று பணம் ஈட்டுகிறார்கள். அப்படி இருக்க, அதன் லாபத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஸ்பான்சராக வரும் பணத்தை நாம் எப்படி விட முடியும்? ஸ்பான்சர் பெறும் தொகைக்கு வரி செலுத்தப்படுகிறது. இது இந்தியாவிற்குத் தான் சாதகம் எனவும் தெரிவித்தார்.

ஆனால் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 19ம் தேதி பதிவிட்ட ஐபிஎல், “நமது ஜவான்களின் தியாகத்தின் விளைவாக ஏற்பட்ட எல்லை சண்டையை கவனத்தில் கொண்டு, ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தது. இதற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்

சீன நிறுவனங்களை ஸ்பான்சராக ஏற்க கூடாது என்றும், அதற்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டுமென்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் ஞாயிற்றுக் கிழமை நடந்த ஐபிஎல் நிர்வாகக் கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகம் சீனாவின் தொலைபேசி நிறுவனமான விவோ உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகி ஒருவர் பிடிஐ நிறுவனத்திடம் கூறும் போது “அனைத்து ஸ்பான்ஸர்களும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதைத்தான் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார். இதனால் ஐபிஎல் ஸ்பான்சர் முடிவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.