ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்தேவ் உனத்கட்டின் அதிரடியான ஹாட்ரிக் விக்கெட்டால் புனே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், ஹைதராபாத் சன் ரைசர்ஸை அணியும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியும் இன்று மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த புனே அணியின் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். எனினும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. பூனே அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 39 ரன்கள், தோனி 31 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். ஹைதராபாத் அணி சார்பாக புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளையும், நெஹ்ரா, கௌல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 149 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹைதராபத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 40 ரன்களும் யுவராஜ்சிங் 47 ரன்களும் எடுத்தனர்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், புனே அனியின் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் சிறப்பாக பந்துவீசி ரன் ஏதும் தராமல் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதுவரை 12 போடிகளில் விளையாடியுள்ள புனே அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.