விளையாட்டு

ஐபிஎல்: சாம்பியன் அணிக்கு பரிசுத் தொகை பாதியாக குறைப்பு

ஐபிஎல்: சாம்பியன் அணிக்கு பரிசுத் தொகை பாதியாக குறைப்பு

jagadeesh

ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. செலவினங்களை குறைக்கும் விதமாக ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை குறைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதன்படி, கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 20 கோடி ரூபாய்க்கு பதிலாக 10 கோடி ரூபாய் மட்டுமே அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு ஆறு கோடியே 25 லட்சம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு தலா 4 கோடியே 30 லட்சம் தரப்பட உள்ளது.

13 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியிலே ரசிகர்கள் பெரிதும் விரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்மை இந்தியன்ஸ் இடையே நடைபெறுகிறது. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் பரிசுத்தொகை குறைப்பட்டிருப்பதற்கு சில அணியின் நிர்வாகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் அணியின் நிர்வாகி ஒருவர் "இது பெரிய பாதிப்பு. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும் இது தொடர்பான ஆலோசனைக்கு அனைத்து அணியின் உரிமையாளர்கள் நிர்வாகிகளை அழைத்து பேச திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.