விளையாட்டு

"தோனி அணிக்கு திரும்புவது கடினம்" அஜய் ராத்ரா !

"தோனி அணிக்கு திரும்புவது கடினம்" அஜய் ராத்ரா !

PT

முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. அந்தப் போட்டிக்குப் பின்னர் தோனி எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனையடுத்து வெளியான இந்திய அணி வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதனையடுத்து தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை வந்த தோனி பயிற்சியில் ஈடுபட்டார். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தோனி திரும்புவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா அண்மையில் கொடுத்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறும்போது "தோனி எப்போதுமே ஒரு கணிக்க முடியாத வீரர்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனென்றால் நீண்டகாலம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். ஆனால் ஐபிஎல் போட்டிகள்தான் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்கையை தீர்மானிக்கும் விதமாக அமைந்துவிட்டது"

மேலும் தொடர்ந்த ரத்ரா "ஐபிஎல் போட்டிகள் மூலமாக தோனியின் திறனை மற்ற விக்கெட் கீப்பர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க பிசிசிஐ நிர்வாகம் தீர்மானித்துள்ளதே இதற்கு காரணம். ஆனால் துரதிருஷ்டவசமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம்தான். ஆனால் தோனி எப்போது என்ன செல்வார் என்று யாருக்கும் தெரியாது" என்றார் அவர்.