இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தீவிரமான பரிசோதனைகளுக்கு பிறகே வீரர்களும், ஊழியர்களும் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி, பிடிஐக்கு தெரிவித்துள்ள பிசிசிஐ, ஐபிஎல்-ல் கலந்து கொள்ளவுள்ள இந்திய வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் 2 கட்ட சோதனைகள் நடத்தப்படும், அதில் கொரோனா பாசிட்டிவ் என்றால் 14 நாட்கள் குவாரண்டைனில் இருப்பார்கள். அதன் பிறகு மீண்டும் விமானத்தில் ஏறுவதற்கும் 24 மணி நேரத்த்திற்கு முன்பு 2 கட்ட சோதனை செய்யப்படும் அதில் நெகட்டிவ் என வந்தால் தான் விமானத்தில் அனுமதிக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் சென்றாலும், 3 சோதனைகள் நடத்தப்படும். அதில் நெகட்டிவ் எனும்பட்சத்தில் பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் போட்டி முடியும் வரை 5 நாட்களுக்கு ஒருமுறை சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பிசிசிஐ எடுக்கும் சோதனைகள் என்பதையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகம் சில சோதனைகளை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது