ஐபிஎல் எக்ஸ்
விளையாட்டு

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறும் தேதி & இடம் அறிவிப்பு - 1,574 வீரர்கள் பங்கேற்பு!

ஐபிஎல் 2025 மெகா சீசனுக்கான ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Prakash J

ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக மெகா இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்பாக அந்தந்த அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியன்று அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. அதற்கான தேதியை பிசிசிஐ, இன்று (நவ.5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஐபிஎல் 2025 மெகா சீசனுக்கான ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த ஏலம், சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் 320 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள், 1,225 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள், 30 பேர் துணை உறுப்பு நாடுகளில் இருந்து பங்கேற்க உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 48 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். உலகம் முழுவதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 272 வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிக்க: 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் Afro -Asia தொடர்| பாகிஸ்தான் வீரர்களுடன் இணையும் இந்திய ஸ்டார்ஸ்!

கடந்த வருடங்களில் விளையாடிய 152 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கின்றனர். 965 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக இந்திய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். அதே போல உலக அளவில் 104 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். வெளிநாடுகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து 91 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்கள், இங்கிலாந்தில் இருந்து 52 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். நியூசிலாந்து நாட்டில் இருந்து 39, வெஸ்ட் இண்டீஸிலிருந்து 33, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து தலா 29 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். மேலும் வங்கதேசத்திலிருந்து 13, கனடாவில் இருந்து 4, அயர்லாந்தில் இருந்து 9, நெதர்லாந்தில் இருந்து 12 என மொத்தம் 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். 204 இடங்களுக்குதான் இந்த 1,574 வீரர்கள் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை வாங்க முடியும். அந்த 204 வீரர்களை வாங்குவதற்கு 10 அணிகளிடமும் 641.5 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது.

இதையும் படிக்க: 2036 ஒலிம்பிக்கை நடத்த இந்தியா விருப்பம்.. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் விண்ணப்பம் சமர்பிப்பு!