2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விதிமுறைகளை இறுதி செய்வது தொடர்பான ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மெகா ஏலத்திற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை மெகா ஏலத்திற்கு முன்பாக தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் ஒரு UNCAPPED வீரரை கட்டாயம் தக்க வைக்க வேண்டும் என்ற விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. வீரர்களை வாங்க அணிகள் 120 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். 2025 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் ஏழரை லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால் மெகா ஏலத்தில் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். மெகா ஏலத்தில் பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது. ஏலத்தில் எடுக்கப்பட்ட பின் தேவையில்லாத காரணத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் வீரர்கள் 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும், IMPACT PLAYER விதிமுறை 2027 வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டிகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் UNCAPPED PLAYER ஆக கருதப்படுவார்கள் என்ற விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் எம்.எஸ்.தோனியை சிஎஸ்கே அணியால் UNCAPPED வீரராக தக்க வைக்க முடியும். இதனால் அடுத்த சீசனிலும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.