விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு? - பிசிசிஐ விளக்கம்

ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு? - பிசிசிஐ விளக்கம்

webteam

ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்களின் ஓய்வு குறித்து இந்திய அணியின் தேர்வுக் குழு முடிவு செய்யும் என பிசிசிஐயின் பொறுப்பு செயலாளர் அமிதாப் செளதாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாக்களில் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுவது ஐபிஎல். அந்தவகையில் இந்தாண்டு ஐபிஎல் திருவிழா வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அணிகள் இதற்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. இத்துடன் எல்லா அணிகளும் தங்களுக்கான வியூகங்களை வகுத்துவருகின்றன. 

இந்தாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது. ஆகவே தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று பல நாடுகள் அறிவுறித்தியுள்ளன. அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே, “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கவேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு உலகக் கோப்பை போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன் தகுந்த ஓய்வு தேவை” எனத் தெரிவித்திருந்தார். 

இதற்கு முன்னாள் கேப்டன் தோனி, “ஐபிஎல் போட்டிகளில் நான்கு ஓவர்கள் தான் வீச வேண்டியிருக்கும். அது பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அத்துடன் ஐபிஎல் போட்டியின் அட்டவணையும் சரியான ஓய்வுகால இடைவெளியுடன்தான் உள்ளது. ஆகவே பந்துவீச்சாளர்கள் தகுந்த ஓய்வை எடுத்துக் கொள்ளலாம். மேலும் நான்கு ஓவர்கள் வீசும் போது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச முடியும்” எனப் பதில் கூறியிருந்தார்.

மேலும் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி, “ஐபிஎல் போட்டிகள் உலகக் கோப்பையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அத்துடன் ஐபிஎல் போட்டிக்கும் உலகக் கோப்பை இந்திய அணி தேர்விற்கும் சம்பந்தமில்லை. ஓரிரு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அது அவர்களின் உலகக் கோப்பைக்கான வாய்ப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பிசிசிஐயின் தற்போதைய பொறுப்பு செயலாளர் அமிதாப் செளதாரி,‘டைம்ஸ் நவ்’ ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், “உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் ஓய்வு அளிப்பது குறித்து இந்திய அணியின் தேர்வுக் குழு முடிவெடுக்கும். 

மேலும் இந்த விவகாரத்தில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்களின் கருத்தும் கேட்கப்படும். ஏனெனில் இந்த வீரர்களை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர்களின் கருத்தும் முக்கியமானது. அத்துடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் துணை பயிற்சியாளர்களின் கருத்தும் இந்த விவகாரம் தொடர்பாக கேட்கப்படும்” எனக் கூறியுள்ளார்.