சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபிஎல் 10ஆவது சீசனில் பெங்களூருவில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பெட்டிங் நடந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் பணம் கொழிக்கும் கிரிக்கெட் லீக்குகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல். சமீபத்தில் நடந்து முடிந்த 2017ம் ஆண்டுக்கான 10ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒவ்வோர் ஆண்டும் ஐபிஎல் தொடரின்போது பெட்டிங் நடப்பதாக புகார்கள் எழுவது உண்டு. அந்தவகையில், சமீபத்திய ஐபிஎல் தொடரில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் மட்டுமே ரூ.10 ஆயிரம் கோடிக்கு பெட்டிங் நடந்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நமது நாட்டில் கிரிக்கெட் பெட்டிங் சட்டவிரோதமாக இருக்கும் நிலையில், இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரு சுப்ரமண்யநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ.31,000 மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டுகின்றனர் போலீசார்.
கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே அந்த போட்டியின் முடிவுகளை மாற்றியமைக்கும் அளவுக்கு பெட்டிங்கில் ஈடுபடும் புக்கிகள் சர்வ வல்லமை படைத்தவர்களாக வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மைதானங்களில் ஆடுகள வடிவமைப்பாளர் முதல் பல்வேறு தரப்பினருடன் புக்கிகள் தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்டிங்குக்கென பிரத்யேகமாக 35 செல்போன் செயலிகளைப் பயன்படுத்தியது உளவுத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்த செயலிகள் மூலம் பெட்டிங் தொடர்பான தகவல் தொடர்புகளை புக்கிகள் மேற்கொண்டதாகவும் தெரிகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டதாக புக்கிகள் சிலரைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 70,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல டெல்லியின் ஷதாரா பகுதியிலும் பெட்டிங் புக்கிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். எந்தவிதமான அடையாள அட்டையும் இல்லாமல் ஈடுபடும் ஆன்லைன் பெட்டிங் குழுக்களைக் கண்டறிந்து, கைது செய்வதென்பது சவாலான காரியம் என்று பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பிரவீன் சூட் கூறுகிறார்.