தோனி, பிசிசிஐ, காவ்யா மாறன் எக்ஸ் தளம்
விளையாட்டு

2025 IPL|தோனியைத் தக்கவைக்கப் போராடிய CSK.. எதிர்த்த காவ்யா மாறன்.. பிசிசிஐ நிலைப்பாடு என்ன?

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அன்கேப்டு (UNCAPED) வீரராக விளையாடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Prakash J

2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த ஏலம் தொடர்பாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களோடு, இந்திய கிரிக்கெட் வாரியம் அண்மையில் ஆலோசனை நடத்தியது. அப்போது, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை, அன்கேப்டு வீரர் பட்டியலில் வைக்கும் விதிமுறையை, மீண்டும் கொண்டுவர வேண்டுமென சிஎஸ்கே அணி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

பொதுவாக, ஐபிஎல் மெகா ஏலத்துக்குமுன், ஓர் அணி மூன்று உள்ளது நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதில் ஒரு வீரர் உள்ளூர் வீரராக இருக்க வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது. பின்னர் அது தேவையற்ற விதி எனக் கூறி 2021க்குப் பிறகு பிசிசிஐ அதை நீக்கி இருந்தது. அதைத்தான் இப்போது சிஎஸ்கே மீண்டும் கொண்டு வர வேண்டும் எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அன்கேப்டு பிரிவு என்பது உள்ளூர்ப் போட்டிகளில் மட்டும் பங்கேற்கும் வகையில் வீரர் இடம்பெறுவார்.

தோனி

அதன்மூலம், ஐபிஎல் மெகா ஏலத்துக்குமுன் உள்ளூர் வீரர் ஒருவரை மட்டும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதியை பயன்படுத்தி அந்த வீரரை தக்கவைத்துக் கொள்ள முடியும். இதைத்தான் சிஎஸ்கே கேட்டதாகவும், இதன்மூலம் தோனியை தக்கவைக்க முடியும் என அவ்வணி நிர்வாகம் நம்புகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர, வேறு எந்த அணியும் இந்த விதி மாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் இதை கடுமையாக எதிர்த்திருக்கிறார். இந்த விதியை கொண்டுவந்தால், மூத்த வீரர்களை நாம் அவமானப்படுத்துவதுபோல இருக்கும் எனவும், தோனி போன்ற ஒரு வீரர் இந்தியாவுக்காக பல சாதனைகளை செய்தபின், உள்ளூர் வீரர் என அறிவிப்பது அவரைக் கீழ்மைப்படுத்தும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: ”வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என அஞ்சினேன்”- எடைகுறைப்பு குறித்து பயிற்சியாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியைத் தவிர்த்து நான்கு வீரர்களை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், தோனிக்கு அதிக சம்பளம் கொடுத்தால் மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்குவது சிக்கலாகிவிடும். அவரை உள்ளூர் வீரராக அறிவித்தால், அதன்மூலமாக அவரை குறைந்த சம்பளத்தில் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதன்மூலம், தோனி சிஎஸ்கே அணியில் ஆடுவதோடு மட்டுமில்லாமல், அவருக்கான சம்பளத்தை குறைத்து அதை மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்க பயன்படுத்திக்கொள்ள முடியும். தனக்காக அதிக சம்பளத்தை வீணடிக்க வேண்டாம், அணியின் நலனுக்கே முக்கியத்துவம் அளியுங்கள் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி கூறி இருக்கிறார். இதை மையமாக வைத்து சி.எஸ்.கே. தரப்பும் பிசிசிஐயிடம் அந்த விதிமுறையை மாற்றச் சொல்லியிருப்பதாக வேண்டுகோள் வைத்துள்ளது.

MS Dhoni

இந்தநிலையில்தான், அந்த விதியை இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் கொண்டுவர வாய்ப்பிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. தோனி, 2025 ஐபிஎல் தொடரில் ஆடினால், அதன்மூலம் கிடைக்கும் அதிக பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் விளம்பர வருவாயை கணக்கிட்ட பிசிசிஐ, அவரை உள்ளூர் வீரராக அறிவிக்கும் வகையில் விதியை மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்மூலம் தோனியை சென்னை அணியால், 4 கோடி ரூபாய்க்கே தக்க வைத்துக்கொள்ள முடியும். கடந்த 2021ஆம் ஆண்டு வரையில் அமலில் இருந்த இந்த விதியை, இதுவரை எந்த அணியும் பயன்படுத்தியதில்லை. இதனிடையே இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ”தோனி அன்கேப்டு வீரர் பட்டியலில் இடம்பெறுவாரா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தாங்கள் அந்த விதிமுறையை கொண்டுவருமாறு வலியுறுத்தவில்லை” என கூறியுள்ளார்.

இதையும் படிக்க: நீரஜ் சோப்ராவுடன் திருமணம் என பரவிய வதந்தி... மவுனம் கலைத்த மனு பாக்கர்!