ஐபிஎல் 16-வது சீசனுக்கான தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் குறித்த பட்டியலை நாளை மாலைக்குள் பிசிசிஐ-க்கு சமர்பிக்க வேண்டிய நிலையில், சென்னை அணி யார், யாரை தக்கவைத்துள்ளது, விடுவித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு நடைபெற்ற 15-வது ஐபிஎல் சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டதால், கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் பிரம்மாண்டமாக மெகா ஏலம் நடைபெற்றநிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள 16-வது சீசனை முன்னிட்டு வருகிற டிசம்பர் மாதம் 23-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடத்தப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நாளை மாலை 5 மணிக்குள் (நவம்பர் 15-ம் தேதிக்குள்) சமர்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. தற்போது இதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் ஒருநாளுக்கும் குறைவான நேரமே உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும், ஏலத்துக்கு முன்பாக தங்களது இறுதிக்கட்ட வீரர்களை தீர்மானிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அதிகமுறை கோப்பைகளை வென்ற பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள, அதாவது 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரிட்டன்ஷன் வீரர்கள் (தக்கவைக்கப்பட்ட வீரர்கள்) குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ள 9 வீரர்களின் பட்டியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, முகேஷ் சௌத்ரி, பிரிட்டோரியஸ், தீபக் சாஹர் தக்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, மிட்செல் சாட்னர் ஆகியோரை சென்னை அணி விடுவிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசனும் விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.